ETV Bharat / state

கட்டுப்பாடுகள் அல்ல முறைப்படுத்தலே: கொடைக்கானல் இ-பாஸ் நடைமுறை குறித்து ஆட்சியர் கூறுவது என்ன? - DINDIGUL COLLECTOR POONGODI

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 3, 2024, 10:49 PM IST

Kodaikanal Park Photo
Kodaikanal Park Photo (credits to Etv Bharat tamilnadu)

E pass for kodaikanal during summer: கரோனா கால இ - பாஸ் நடைமுறை போன்று தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இ - பாஸ் இருக்காது, எனவே, கொடைக்கானல் வாழ் சுற்றுலா சார் தொழிலாளர்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்: கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், எந்த ஆண்டும் இல்லாத வகையில் நடப்பு ஆண்டில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், வெளியில் செல்வதற்கே மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது

இந்நிலையில், பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும், வெயிலின் தாக்கத்தைப் போக்குவதற்காகவும், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய பகுதிகளுக்குக் கூட்டமாகப் படையெடுத்து வரத் தொடங்கியுள்ளனர். இதுமட்டுமின்றி, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வருகை புரிந்து வருகின்றனர்.

ஒரு நாளைக்கு சுமார் 20 ஆயிரம் வாகனங்கள் ஊட்டி, கொடைக்கானலுக்குச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதைத் தொடர்ந்து, ஊட்டி, கொடைக்கானலில் வரும் மே 7ம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறையை (E Pass) அமல்படுத்த வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, "கரோனா கால இ - பாஸ் நடைமுறை போன்று தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இ-பாஸ் இருக்காது. கோடை பருவ காலத்தில், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் பணிகளுக்காகவே எளிமைப்படுத்தப்பட்ட இ-பாஸ் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

இது கட்டுப்பாடுகள் அல்ல, முறைப்படுத்தலே. எனவே, கொடைக்கானல் வாழ் சுற்றுலா சார் தொழிலாளர்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. மேலும், விரைவில் உள்ளூர் மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு மக்களின் ஆலோசனைகள் கேட்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Agni Natchathiram 2024: இது வெறும் ட்ரெய்லர்தான்..மெயின் பிக்சர் இனிமேதான்.! - Agni Natchathiram 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.