ETV Bharat / state

தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 24 நாட்களில் 10 விபத்துக்கள் - தருமபுரி எம்.எல்.ஏ அளித்த அதிர்ச்சி தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 7:57 PM IST

தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலை
தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலை

Toppur National Highway accident: கடந்த 2008ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தருமபுரி தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற விபத்துக்கள் குறித்து விளக்குகிறது இச்செய்தித் தொகுப்பு.

தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாகவும் நாட்டின் தென் மாநிலத்திலிருந்து, வட மாநிலங்களுக்குச் செல்லும் முக்கிய சாலையாக தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் உயிரிழப்பு ஏற்படாத மாதமே இல்லை. 2024 ஆம் ஆண்டு தொடங்கி 25 நாட்கள் ஆன நிலையில், 10 விபத்துகள், 6 உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளன.

இச்சாலையில் விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக இவ்வழியே வரும் கனரக வாகனங்களை, ஐந்து நிமிடம் நிறுத்தி பிறகு சாலையில் செல்ல அனுமதிக்கின்றனர். இவ்வாறு முன் ஏற்பாடுகள் நிகழ்ந்தும் விபத்துக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது. கடந்த புதன்கிழமை (ஜன.24) தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, வேகமாகச் சென்று இரண்டு கார்கள் மற்றும் ஒரு லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டு விபத்தில், லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து நடந்தது எப்படி: தொப்பூர் சாலையில் விபத்தைத் தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது, “தொப்பூர் பகுதியில் நேற்று நடைபெற்ற விபத்து பற்றிக் கேள்விப்பட்ட உடனேயே அந்தப் பகுதியில் பார்வையிட்டேன். இந்த விபத்தின் சிசிடிவி காட்சியைப் பார்க்கும் பொழுது, லாரி இரண்டு கார் விபத்துக்குள்ளாகி, ஒரு லாரி பாலத்திலிருந்து கீழே விழுந்துள்ளது.

ஒரு காரில் பயணித்த 7 நபர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர் என்பது தெரிய வந்தது. விபத்து நடந்த போது சமூக எண்ணத்துடன் அங்கு வந்த இளைஞர்கள், துரிதமாகச் செயல்பட்டு, 6 வயதுக் குழந்தை, மற்றொரு குழந்தை என மூன்று குழந்தைகளை மீட்டனர். சமூக எண்ணத்துடன் செயல்பட்ட அந்த இளைஞர்களை நான் பாராட்டுகிறேன்.

அந்த இளைஞர்கள் காரில் உள்ள நபர்களை மீட்பதற்குள் லாரியில் பற்றி எரிந்த தீ, மளமளவெனக் காரை பற்றிக் கொண்டது. இதனால் இந்த விபத்தில் நான்கு உயிர்களின், உடல் கருகியது. இப்பகுதியில் நடைபெறும் தொடர் விபத்திற்குத் தமிழக அரசு, மத்திய அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் சட்டமன்ற உறுப்பினராகிய நான், அந்த சாலையின் முன்பு போராட்டம் நடத்துவேன்” என்றார்.

தருமபுரி - சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் மலைப்பகுதியில் சாலை விபத்துக்கள் அதிகமாகத் தினந்தோறும் ஏற்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும் பத்து விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துக்களால் உயிரிழப்புகள் மற்றும் பெரிய பொருளாதார சேதாரம் ஏற்படுகிறது. இந்த சாலையானது தமிழகத்தினுடைய தென் மாநில பகுதியிலிருந்து இந்தியாவினுடைய வட மாநிலம் பகுதிக்குச் செல்லும் முக்கிய சாலை என்பதால், தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், சிறிய வாகனங்கள் இவ்வழியே என்று சென்று வருகின்றன.

சாலை அமைத்தது முதல் தொடர் விபத்து: இந்த சாலை கடந்த 2008 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அன்று முதல் இன்று வரை தினந்தோறும் பெரிய விபத்துக்கள், உயிரிழப்புக்கள், பொருளாதார இழப்புகள் என நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விபத்து ஏற்படும் நேரத்திலும் அந்த விபத்து ஏற்படும் போது அனைத்து அலுவலகங்கள், காவல்துறை மற்றும் மாநில, மத்திய அரசு அதிகாரிகள் வந்து பார்க்கிறார்கள். பின்பு அமைதியாகி விடுகிறார்கள்.

விபத்தைத் தடுக்க ஒரு புதிய சாலை மாற்றப்பட்டு, விபத்தில்லா சாலை அமைக்கப்பட வேண்டும். இந்த சாலையை மாற்றி அமைப்பதற்கு மாநில அரசும், மத்திய அரசும் தொடர் முயற்சி செய்யவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. பாமக அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது இது குறித்துத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். நான் சட்டமன்ற உறுப்பினர் ஆகியவுடன் இந்த சாலை விபத்தைத் தடுத்து, புதிய சாலை அமைக்கப்பட வேண்டும் என்று சென்னையில் உள்ள ஜெனரல் மேனேஜர் நகாய் அலுவலரை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினேன்.

விபத்தில்லா சாலை: கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம், டெல்லியில் உள்ள நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரியைச் சந்திப்பதற்கு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பாமக அன்புமணி ராமதாஸ் தேதி வாங்கி கொடுத்ததை அடுத்து, தருமபுரி சட்டமன்ற உறுப்பினராகிய நான், சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் உடன் அவரை சந்தித்து, தொப்பூர் சாலையை விபத்தில்லா சாலை அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: மாற்று வழியில் சாலை அமைப்பதற்காக 758 கோடி ரூபாயில் ஒப்பந்தப் புள்ளி கோரி உள்ளனர். தனியார்த் துறையில் இருக்கும் நிலங்கள் எடுக்கப்பட வேண்டும். நில எடுப்பு பணிக்காக மாநில அரசு, மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் உடனடியாக நியமித்து, மாவட்ட வருவாய் அலுவலர் கண்டறியப்பட்ட நிலத்தை எடுத்து உடனடியாக அந்த மத்திய அரசுக்கு ஒப்படைத்தால் ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்பட்டு வேலை துவக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு நாளும் காலதாமதம் ஏற்படும் பொழுதும் ஒவ்வொரு உயிரிழப்புக்கள் நடக்கிறது. மத்திய மாநில அரசு, அனைத்து அமைச்சர்கள், அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் கவனத்தில் எடுத்துக்கொண்டு சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: தொப்பூரில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து...3 பேர் உயிரிழப்பு! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.