ETV Bharat / state

வடலூரில் 153வது ஜோதி தரிசன பெருவிழா: 7 திரைகளை நீக்கி ஒளிர்ந்த ஜோதியை தரிசித்த பக்தர்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 1:21 PM IST

Updated : Jan 26, 2024, 9:32 AM IST

7 திரைகளை நீக்கி ஒளிர்ந்த ஜோதியை தரிசித்த பக்தர்கள்
வடலூரில் 153 வது ஜோதி தரிசன பெருவிழா

Arutperunjothi vallalar Darshan: கடலூர் மாவட்டம் வடலூரில் இன்று நடைபெற்ற 153 வது ஜோதி தரிசன பெருவிழாவில் ஏழு திரைகளை நீக்கி ஒளிர்ந்த ஜோதியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என்கிற மகாமந்திரத்தை ஒலித்தனர்.

கடலூர்: உலகில் உள்ள மக்கள் அனைவரும் சமம், எல்லோரும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தி ஞானியாக விளங்கியவர் வள்ளலார். எல்லா உயிர்களிடத்திலும் இறைவன் இருக்கிறான் என்றும், மாயைகளை நீக்கி ஞானத்தை அடைய உணக்குள்ளே இருக்கும் ஜோதியை காண வேண்டும் என்பதையும் உணர்த்தியவர் அவர்.

கடலூருக்கு அருகே உள்ள மருதூரில் பிறந்த ராமலிங்க அடிகளார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை அமைத்து உயிர்க்கருணை ஒழுக்கத்தை கடைபிடிக்கச் சொல்லி அனைவரையும் வலியுறுத்தினார். வடலூரில் பார்வதிபுரம் என்னும் ஊர் மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, அங்கு சமரச வேதத் தருமச்சாலையைத் தொடங்கினார்.

பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லா நற்பயன்களுக்கும் மேலானது என்று அறிவுறுத்தி வந்த வள்ளலார் அன்னதானச் சாலை ஒன்றை அமைத்தார். அவர் அன்று ஏற்றி வைத்த அடுப்பு இன்று வரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் இருக்கிறது. இங்கு, சாதி, சமய, மொழி, இன, நிறப்பாகுபாடுகள் பாராமல் மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் ஜோதி வடிவத்தில் காட்சி அளிக்கிறார் என்பது ஐதீகம். இந்நிலையில் அவர் தோற்றுவித்த வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று (ஜன.24) கொடி ஏற்றதுடன் துவங்கியது.

வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசன விழா முதன்மையான ஒன்றாகும். மேலும் இங்கு தைப்பூசம் ஆண்டு தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான இறைவனை ஒளி வடிவமாகப் போற்றிய வள்ளலாரின் ஜோதி தரிசன விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இதையொட்டி காலை 6 மணிக்கு முதல் கால ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. அப்போது சன்மார்க்க அன்பர்கள் பக்தி பரவசத்துடன் அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என்கிற மகாமந்திர ஒலி, ஞானசபை திடல் எங்கும் ஓங்கி ஓலித்தது.

வடலூரில் இன்று நடைபெற்ற இந்த 153 வது ஜோதி தரிசன பெருவிழாவை காண தமிழகம், உலகெங்கும் வாழும் தமிழர்கள், வெளிநாட்டவர்கள், லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் வடலூரில் திரண்டனர். இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி நாளை காலை 5.30 மணிக்கும் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாட்டில் இருந்தும் ஏராளமானோர் வருகை தர உள்ளதால் போக்குவரத்தை சீா் செய்யவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் 800 போலீஸாா் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனா். மேலும் பாதுகாப்பிற்காக 10 கண்காணிப்பு கோபுரங்கள், மற்றும் 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தைப்பூசத் திருவிழா.. பழனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சூடம் ஏந்தி சூரிய பகவான் தரிசனம்!

Last Updated :Jan 26, 2024, 9:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.