விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில், 50க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இயக்கி வருகின்றன. இதில் திருவக்கரை பகுதி அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான குவாரி ஒன்றில், இன்று (பிப்.8) காலை வழக்கம்போல் பொக்லைன் இயந்திரம் மூலம் பாறைகளை உடைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பாறை கற்கள் சரிந்து விழுந்து, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் எரையூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் ஆகிய இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக உயிரிழந்தவர்களின் உடலை பொக்லைன் இயந்திரம் மூலம் வெளியில் எடுத்துள்ளனர்.
பின்னர், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, கல்குவாரியில் பணிபுரிபவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில்லை என்றும், இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கல்குவாரியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, திண்டிவனம் டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
நேற்று (பிப்.8), நீலகிரி மாவட்டம் உதகை அருகே கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில், பழைய கட்டிடம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 6 பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "முன்னாடியே சாப்பிட்டது தவறா..?" புதுக்கோட்டையில் தொடரும் சாதிய தாக்குதல்.. பொதுமக்கள் சாலை மறியல்!