ETV Bharat / state

கிரஷர் சிமெண்ட் துகள்களால் அழிந்து வரும் மரக்கன்றுகள்.. நடவடிக்கை எடுக்க அரசுக்கு விவசாயி கோரிக்கை! - crusher plant

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 4:04 PM IST

crusher cement particles
கிரஷர் சிமெண்ட் துகள்கள்

Farmer Issue: ஓசூர் அருகே ஜல்லி, கிரஷர் சிமெண்ட் துகள்களினால் அழியும் நிலையில் இருக்கும் விலையுயர்ந்த மரம், செடிகளை காப்பாற்ற வேண்டும் என அரசுக்கு விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.

கிரஷர் சிமெண்ட் துகள்கள்

கிருஷ்ணகிரி: ஒசூர் வட்டம் முத்தாலி பஞ்சாயத்து, அத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி நவீன் குமார். இவர் தன்னுடைய பூர்வீக சொந்த நிலமான சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில், வனத்துறை மூலம் கொடுக்கப்பட்ட செடிகள், சிவப்பு சந்தன மரம், மகாகனி, சந்தன மரம் மற்றும் மா, தென்னை, வாழை என பல்வேறு மரங்களை நடவு செய்துள்ளார்.

இந்த மரங்கள் அனைத்தும் நன்கு வளர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக அப்பகுதியில், சேட்லைட் டவுன் ரிங் ரோடு (STRR) சாலைக்கான பணிகளுக்காக கிராமத்தை ஒட்டியே கிரஷர் அமைத்து, ஜல்லி, கிரஷர் எம்சாண்ட் தயாரிக்கும் மிஷின் மற்றும் கான்கிரீட் கலவை போன்ற மிஷின்களை ஒரே இடத்தில் வைத்து, அப்பணிகளை தனியார் நிறுவனம் செய்து வருகிறது.

இந்தப் பணியானது, அரசு அனுமதி பெற்று நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், அரசின் விதிமுறைகள் ஏதும் பின்பற்றப்படாததாக குற்றம் சாட்டப்படுகிறது. ஏனெனில், கிராமப்புறத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில், விவசாயிகளை பாதிக்காதவாறு பணிகளைச் செய்ய வேண்டும் என்ற அரசு விதிமுறையை மீறி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த பணிகளைச் செய்வதற்காக, அக்கிராமத்தைச் சேர்ந்த பிரதாப் மற்றும் பிரவீன் ஆகியோரின் நிலங்களில் STRR (Satellite Town Ring Road) ஒப்பந்ததாரர்கள், கிரஷர் அமைப்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், சுமார் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள், கிராமத்திற்குள்ளேயே கல் உடைக்கும் இயந்திரங்களைக் கொண்டு கல் உடைத்து, கிரஷர்களில் எம்சாண்ட் தயாரிக்கின்றனர்.

அதேபோல், அங்கேயே சிமெண்ட் கலவை மூலம் கான்கிரீட்டும் தயார் செய்து, சாலை அமைப்பதற்காக நூற்றுக்கணக்கான வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கிராமப்புற சாலைகள் ஒரு பக்கம் சேதமடைந்தும், மறுபுறம் விவசாயிகளின் பயிர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டும் வருவதாக ஊர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் பயிர்கள் சேதம் அடைவது மட்டுமல்லாமல் ஆடு, மாடுகளுக்கும் உணவு அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, கிரஷர் அருகே உள்ள விவசாயி நவீன்குமாருக்குச் சொந்தமான நிலத்தில் பயிரிட்டுள்ள மகாகனி, சந்தன மரம், சிவப்பு சந்தன மரம், வாழை, தென்னை, மாமரம் போன்ற மரங்களில் வெண் போர்வை போர்த்தியது போல், சிமெண்ட் துகள்கள் இழை மீது படர்ந்துள்ளது.

மாசு காரணமாக மரங்கள் மற்றும் செடிகளின் இலைகள் கருகி, அவை வளர முடியாத சூழல் உருவாகி இருப்பதாக விவசாயி குற்றம் சாட்டுகிறார். மேலும், லட்சக்கணக்கில் செலவு செய்து நடவு செய்துள்ள விலை உயர்ந்த மரக்கன்றுகளை காப்பாற்ற உதவிடுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதோடு, தங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரமே, இந்த மரங்களை நம்பித்தான் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், விவசாயி உரிய இழப்பீடு வழங்கவும், கிராமத்தின் மத்தியில் உள்ள ஜல்லி கிரஷர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் முதலமைச்சரின் நேரடி பார்வை அலுவலகத்திற்கும் பலமுறை கடிதம் மூலம் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வேட்புமனுவை மறந்த தஞ்சாவூர் தேமுதிக வேட்பாளர்.. நீண்ட நேர போராட்டத்திற்கு பின் வேட்புமனு தாக்கல்! - DMDK CANDIDATE NOMINATION

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.