ETV Bharat / state

விடுப்பு மறுப்பு: நீதிமன்றத்திற்குள் உதவியாளர் தற்கொலை முயற்சி..கரூரில் நடந்தது என்ன? - Court assistant suicide in kraur

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 12:06 PM IST

Court assistant suicide attempt
அரவக்குறிச்சி உரிமையியல் நீதிமன்றம்

Court assistant suicide attempt: அரவக்குறிச்சி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி விடுப்பு வழங்க மறுப்பு தெரிவித்ததால், நீதிமன்ற உதவியாளர் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்திற்குள் உதவியாளர் தற்கொலை முயற்சி

கரூர்: அரவக்குறிச்சி உரிமையியல் நீதிமன்றத்தில் துணை நாசராக பணியாற்றி வருபவர் லாலாப்பேட்டையை சேர்ந்த நடராஜன். இவர் பணியிட மாற்றம் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் அன்று அரவக்குறிச்சி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.

இவருக்கு மருத்துவ மற்றும் தற்செயல் விடுப்புகள் வழங்காமல் நிராகரிக்கப்பட்டதாகவும், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாத ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், மனம் உடைந்த நடராஜன், அரவக்குறிச்சி நீதிமன்ற வளாகத்தில் நேற்று( வியாழக்கிழமை) கைப்பட எழுதிய கடிதத்தை நீதிபதியிடம் வழங்கிவிட்டு, மயங்கி விழுந்துள்ளார். அங்குள்ள ஊழியர்கள் அவரை மீட்டு கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் ஜெயராம், இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இந்நிகழ்வின் போது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் எம்.எஸ்.அன்பழகன், மாநில துணைத்தலைவர் செல்வராணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் ஜெயராம் கூறுகையில், “அரவக்குறிச்சி உரிமையியல் நீதிமன்றத்தில், மருத்துவ விடுமுறை அளிக்க மறுத்த நீதிபதியால், அரசு ஊழியர் நடராஜன் தற்கொலை முயற்சி செய்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்காததால், குடும்பம் சிரமப்பட்டு வந்துள்ளது. தினசரி பணிக்காக வீட்டிலிருந்து நீதிமன்றத்திற்கு சென்று வர பேருந்துக்கு கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவரை கொத்தடிமை போன்று நடத்தப்படுவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு, நீதிமன்றத்திற்குள் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். தொடர்ந்து, மேல் நடவடிக்கைக்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கும், உயர் நீதிமன்ற நீதிபதிக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், புகார் மனு அளிக்க உள்ளோம். எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத பட்சத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீதிமன்ற ஊழியர் நடராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற ஊழியரின் ஒப்புதல் கடிதமும், புகைப்படமும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருவதால், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சுட்டெரிக்கும் கோடை காலத்தை அணுக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன? மு.க.ஸ்டாலின் அறிக்கை! - Protection Of People From Summer

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.