ETV Bharat / state

"மதுபானத்தை அரசே விற்பதால் மது அருந்துவதை குற்றமாக கருத முடியாது" - சென்னை உயர் நீதிமன்றம்! - Madras High Court about Liquor sale

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 8:41 PM IST

உயர்நீதிமன்றம் கருத்து
மதுபானம் அருந்துவதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்

MHC about liquer sale by govt: மதுபானத்தை அரசே விற்பதால், மது அருந்துவதை குற்றமாக கருத முடியாது எனவும், மதுபானம் அருந்துவதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை: சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படுபவர்கள் மீது மது வாசனை இருந்தால், அதன் அளவுகளை அறிக்கைகளில் பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ரமேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ளார். இந்நிலையில், அவர் இழப்பீடு கோரி பெரம்பலூர் விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மருத்துவ அறிக்கையை மேற்கோள்காட்டி, ரமேஷ் மீது மது வாசனை வீசியதாலும், பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றாததாலும், விபத்துக்கு அவரும் காரணம் எனக் கூறி, 50 சதவீத இழப்பீடாக 1 லட்சத்து 53 ஆயிரத்து 952 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு இன்று (ஏப்.17) விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மது வாசனை வீசியதாக கூறிய போதிலும், அதன் அளவைக் குறிப்பிடவில்லை. மாநிலத்தில் உள்ள சாலைகளில் பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்ற முடியாது எனக் கூறி, ரமேஷுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டை 3 லட்சத்து 53 ஆயிரத்து 904 ரூபாயாக அதிகரித்து வழங்க உத்தரவிட்டார்.

மேலும், மது அருந்துவதை குற்றமாக கருத முடியாது எனவும், மதுபானத்தை அரசே விற்பதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, மதுபானம் அருந்துவதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படுபவர்கள் மீது மது வாசனை இருந்தால், அதன் அளவுகளை அறிக்கைகளில் பதிவு செய்ய வேண்டும் எனவும், பல வழக்குகளில் அந்த அளவுகள் பதிவு செய்யப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, இதன் காரணமாக விபத்து வழக்குகளில் காயமடைபவர்களுக்கு உரிய இழப்பீட்டைத் தீர்மானிக்க முடியாத நிலை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே, விபத்துக்களில் சிக்கி மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படுபவர்களின் மீது மது வாசனை இருந்தால், அதன் அளவுகளை அறிக்கைகளில் பதிவு செய்வதை கட்டாயமாக்கி, அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி, தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை பதிவாளர் நியமனம் விவகாரம்; சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! - Anna University Registrar Posting

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.