ETV Bharat / state

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடக்கம்! - Vallalar International Center

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 6:34 PM IST

கடலூர்
கடலூர்

Vallalar International center: பொதுமக்களின் போராட்டத்தால் நிறுத்திவைக்கப்பட்ட வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமானப் பணிகள், நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளது.

கடலூர்: கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சக்தி ஞான சபை செயல்பட்டு வருகிறது. இந்த சத்திய ஞான சபையைக் கட்டுவதற்கு, சத்திய ஞான சபை அருகே உள்ள பார்வதிபுரம் மக்கள் 100 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், வள்ளலாரின் புகழ் உலகறியவும், வள்ளலார் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் விதமாகவும், வள்ளலார் சர்வதேச மையம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து. அதற்காக, கடந்த மாதம் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

இதனையடுத்து, இதற்கான பணிகள் கடந்த வாரம் துவங்கிய நிலையில், பார்வதிபுரம் மக்கள் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு, வள்ளலார் சர்வதேச மையம் அமைவதை வரவேற்பதாகவும், ஆனால் பார்வதிபுரத்தில் உள்ள சத்திய ஞான சபையில் இது அமையக்கூடாது எனக் கூறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், இன்று (ஏப்.21) மீண்டும் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி துவங்கி உள்ளது.

சர்வதேச மையம் அமைக்கும் பகுதியைச் சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மீண்டும் போராட்டம் நடத்தும் சூழல் உள்ளதால், காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, பார்வதிபுரம் கிராமத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது, உடனடியாக சர்வதேச மையம் கட்டுமானப் பணியை நிறுத்துவதாகவும், மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு வேறு இடத்தில் அமைக்கப் போவதாகவும் தெரிவித்தார். இந்த சூழலில், இன்று கட்டுமானப் பணிக்கான வேலை தொடங்கியுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: 80 பவுன் தங்கச் செயின் பரிசா?.. உற்சாகத்தில் யாக்கர் கிங் நடராஜன்! - NATARAJAN Got Gold Chain

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.