ETV Bharat / state

நெல்லை தீபக் ராஜா படுகொலை: சாதிய மோதலை தூண்டுவதாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது புகார்! - pa ranjith on deepak raja

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 3:59 PM IST

Pa Ranjith: நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கு குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த இயக்குநர் பா.ரஞ்சித் மீது தென் தமிழக கட்சி புகார் அளித்துள்ளது.

பா.ரஞ்சித், புகார் அளித்த நபர்கள்
பா.ரஞ்சித், புகார் அளித்த நபர்கள் (Credit - ETV Bharat)

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை நாங்குநேரி வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜா என்பவர் கடந்த 20 ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையை கண்டித்து இயக்குனர் பா.ரஞ்சித் 21-ஆம் தேதி காலை 7 மணி அளவில் அவருடைய 'நீலம் பண்பாட்டு மையம்' என்ற எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது.

அதில் ''தீபக் ராஜா கொலை வழக்கில் மறவர் சமூகத்தைச் சேர்ந்த குற்றவாளிகளை எஸ்சி.எஸ்டி,. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும்'' என பதிவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதற்கு எதிர்வினையாற்றிய தென் தமிழக கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுரளி என்பவர் பரமக்குடி டிஎஸ்பி சபரிநாதனிடம் புகார் மனு அளித்தார்.

அதில் ''சங்க இலக்கியத்திலும், புராணங்களிலும் மறவர் என்ற சமூகம் மிகவும் பெருமை வாய்ந்தது என வரலாற்றுச் சான்று கூறுகின்றது. இப்படிப்பட்ட மறவர் சமுதாயத்தினர் பற்றி சமூக வலைதளத்தில் தவறான கருத்து பதிவு செய்து தென் மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டி விட நினைக்கும் இயக்குனர் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியிருந்தார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட டிஎஸ்பி, புகார் மனு குறித்து சைபர் க்ரைம் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.

மர்ம நபர்களால் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் கொலை வழக்கில் தற்போது 4 பேர் கைதாகியுள்ள நிலையில், 10க்கும் மேற்பட்டோர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தற்போது பிடிபட்ட நான்கு பேரும் நேரடியாக கொலையில் ஈடுபடவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

எனவே, நேரடியான குற்றவாளிகளை கைது செய்யும் வரை தீபக் ராஜா உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், தீபக் ராஜாவின் கொலை சம்பவம் தென் மாவட்டங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையில் சாதி ரீதியிலான பின்னணி இருப்பதாக சந்தேகிக்கும் காவல்துறை எந்த நேரமும் பழிக்கு பழியாக குற்ற சம்பவங்கள் நடைபெறலாம் என்பதால் நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலும் பழைய ரவுடிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.

இதையும் படிங்க: தீபக் ராஜா கொலை எதிரொலி.. பழைய ரவுடிகளுக்கு பாதுகாப்பு.. பதற்றத்தில் தென் மாவட்டங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.