ETV Bharat / state

"லஞ்சம் ஒழிப்பு குறித்து அண்ணாமலை பேசுவது வேடிக்கையாக உள்ளது" - பி.ஆர்.நடராஜன் விமர்சனம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 11:06 AM IST

P.R.Natarajan
பி.ஆர்.நடராஜன்

P.R.Natarajan: அண்ணாமலை மேடை போட்டு லஞ்சத்தை ஒழிக்கப் போவதாக பேசுவது வேடிக்கையாக உள்ளது என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்தார்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜனின் 5 ஆண்டு கால மக்கள் பணிகளின் தொகுப்பு குறித்த நூல் வெளியீட்டு விழா

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், சித்தாபுதூர் பகுதியில் உள்ள வி.கே.கே.மேனன் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜனின் 5 ஆண்டு கால மக்கள் பணிகளின் தொகுப்பு குறித்த நூல் வெளியீட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் சௌந்தரராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், 'கோவையின் மேன்மைக்கான பணிகளில் தோழர் பி.ஆர்.நடராஜன்' என்ற நூல் வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து சௌந்தரராஜன் மற்றும் குணசேகரன் ஆகியோர் பேசுகையில், 'பாஜகவின் கடந்த பத்தாண்டுக் கால ஆட்சியில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி உள்ளிட்ட தவறான வரி விதிப்பு நடைமுறைகளால், சிறு மற்றும் குறு தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களைப் பிளவுபடுத்தி மதத்தை வைத்து அரசியல் செய்யும் பாஜக ஒன்றியத்தில் மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருக்க எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 'இந்தியா' கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பேசிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், "கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த கோவை மக்களுக்கு நன்றி. நாடாளுமன்றத்தில் ஆதீனங்களை அழைத்து, அவர்கள் கையால் செங்கோல் பெற்றுக் கொண்டு பிரதமர் மரியாதை செலுத்தினால், தமிழ்நாட்டில் ஆதீனங்களை மிரட்டி பாஜகவினர் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

அங்கித் திவாரி என்ற அமலாக்கத்துறை அதிகாரி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர் மீதான அமலாக்கத்துறை வழக்குகளை ரத்து செய்ய ரூ.30 லட்சம் பெற்ற நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டபோது, அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அமலாக்கத்துறை வழக்குகள் உள்ள 78 நபர்களின் விவரங்கள் இருந்தது. இந்நிலையில், அமலாக்கத்துறை உயரதிகாரிகள் சொல்லாமல், அவர்களது பங்கு அதில் இல்லாமல், ஒரு சாதாரண அதிகாரிக்கு லஞ்சம் கேட்க எப்படித் தைரியம் வந்தது.

சூழல் இப்படி இருக்கின்ற வேளையில், அண்ணாமலை மேடை போட்டு லஞ்சத்தை ஒழிக்கப் போவதாகப் பேசுவது வேடிக்கையாக உள்ளது. கோவையில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்வரும் நாட்களில் கடுமையாக உழைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்; 8.20 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.