ETV Bharat / state

திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் சித்திரை தேரோட்டம்.. விண்ணை முட்டிய பக்தர்களின் கோவிந்தா கோஷம்! - SRIRANGAM CHARIOT THIRUVIZHA

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 6, 2024, 3:51 PM IST

Trichy Srirangam Temple Chithirai Chariot festival: திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற சித்திரை தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Srirangam Temple Chariot festival
Srirangam Temple Chariot festival (Photo Credits to Etv Bharat Tamil Nadu)

திருச்சி: 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் எனப் பக்தர்களால் அழைக்கப்படுவது ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இந்த கோயிலில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். ஶ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதேபோல, இவ்வாண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. அதன் பின்னர், கற்பக விருட்சம், யாளி, கருட, ஹனுமந்த, யானை ஆகிய வாகனங்களில் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்குத் தரிசனம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து 7ம் திருநாளான இந்த மாதம் 4ஆம் தேதி நம்பெருமாள் திருச்சிவிகை வாகனத்தில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார்.

அதன் பின்னர் சித்திரை வீதிகளில் வலம் வந்த அவர் தயார் சன்னதி சென்றடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளிய அவர் மீண்டும் மூலஸ்தானம் வந்தடைந்தார். அதைத் தொடர்ந்து, 8ஆம் திருநாளான நேற்று அவர் தங்கக் குதிரை வாகனத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 9ஆம் திருநாளான இன்று அதிகாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலிலிருந்து சீர் வரிசையாக வந்த கிளி மாலையை அணிந்த படி மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம் பெருமாள் மேஷ லக்கனப்படி அதிகாலை 5.15 மணிக்குத் திருத்தேரில் எழுந்தருளினார்.

பின்னர், காலை 6 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா எனக் கோஷம் முழங்கத் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு முக்கிய வீதிகளிலும் வலம் வந்தது. ரெங்கா ரெங்கா என்று தரிசித்த பக்தர்களுக்குத் திருத்தேரில் எழுந்தருளிய நம்பெருமாள் அருள்பாலித்தார். சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு, ஸ்ரீரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டு கட்டாக ரூ.25 கோடி பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.