ETV Bharat / state

வேலூர் சிறையில் பிரபல ரவுடியை ஆடையை அவிழ்த்து சித்திரவதை? - வழக்கறிஞர் சிவாஜி பரபரப்பு புகார்! - Vellore Central Jail

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 3:57 PM IST

Vellore Central Jail
வேலூர் மத்திய சிறை

Vellore Central Jail: வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சித்திரவதை செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சிவக்குமார் சிவாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

வழக்கறிஞர் சிவாஜி

வேலூர்: சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் பிரபல ரவுடி நாகேந்திரன். இவர் 1999ஆம் ஆண்டு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரது மனைவி விசாலாட்சி நேற்று முன்தினம் அவரை சந்திக்க வந்துள்ளார். ஆனால், சிறை அதிகாரிகள் நாகேந்திரனை சந்திப்பதற்கு அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், விசாலாட்சி அவரது தரப்பு வழக்கறிஞர் சிவக்குமார் சிவாஜியிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

தகவலின் அடிப்படையில், நேற்று (புதன்கிழமை) நாகேந்திரனை சந்திக்க வழக்கறிஞர், வேலூர் மத்திய சிறைக்கு வந்துள்ளார். அப்போது, நாகேந்திரனை சந்திக்க சிறை அதிகாரிகள் கெடுபிடி செய்ததாக கூறப்படுகிறது. பல மணி நேரத்துக்கு பின்னர் வழக்கறிஞர் நாகேந்திரனை சந்தித்துள்ளார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து வழக்கறிஞர் சிவக்குமார் சிவாஜி கூறியதாவது, “நாகேந்திரனை சந்திக்க வேண்டும் என்று நான் மனு கொடுத்தேன். அதன் அடிப்படையின், மூன்று நிமிடத்திற்கு மட்டும் அனுமதி அளித்தனர். சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நாகேந்திரன் மீது மனித உரிமை மீறல் நடக்கிறது. இது ஒரு ஜனநாயக படுகொலை.

நாகேந்திரன் ஒரு மாதத்திற்கு முன்பாக கல்லீரல் மாற்றம் செய்துள்ளார். இதனால், அவருக்கு குறிப்பிட்ட உணவுகளை அளிக்குமாறு மருத்துவமனை பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு சரியில்லை என அவர் சிறை அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதனால், காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, அவரை தனிச்சிறையில் அடைத்து, மருத்துவர்கள் பரிந்துரை செய்த உணவுகளை கொடுப்பதற்கு சிறைக்காவலர் அருள்குமரன் மறுத்துள்ளார். அருள்குமரன் கடந்த 7 வருடங்களாக இந்த சிறையில் பணியாற்றுகிறார். ஒரு அரசு அதிகாரி ஒரே சிறையில் இத்தனை ஆண்டுகள் பணியாற்ற முடியாது” என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “நாகேந்திரனை காண்பதற்கு அவரது மனைவிக்கும் அனுமதி வழங்குவதில்லை. அவரை மனரீதியாகவும் சித்திரவதை செய்துள்ளனர். தனி அறையில் ஆடைகளை அவிழ்த்து கொடுமைப்படுத்தி உள்ளனர். உணவு சரியில்லை என்று கூறியதால் அவரை பழிவாங்கும் நோக்குடன் சிறை காவலர்கள் செயல்படுகின்றனர். சிறையில் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே, இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: "ஓட்டு போடுவதற்காவது வண்டி அனுப்புங்க".. தேர்தல் பிரச்சாரத்தையே அறியாத திருநெல்வேலி காணி பழங்குடியினர்! - LOK SABHA ELECTION 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.