ETV Bharat / state

வடசென்னை வேட்பு மனு தாக்கல் விவகாரம்; ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்! - North Chennai nomination issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 3:57 PM IST

Radhakrishnan IAS inspection
Radhakrishnan IAS inspection

Chennai Flying Squad: தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை 7 கோடியே 83 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் ஏப்.19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்த அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் 3,726 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இதில் 19,396 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிபுரியவுள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இதில் மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த நிலையில், இன்று (செவ்வாய்கிழமை) சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை மாவட்டத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, சட்டமன்றத் தொகுதி வாரியாக உள்ள வைப்பு அறைக்கு அனுப்பி வைக்கும் பணியினை, மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், “4,469 பேலட் யூனிட்கள், அந்தந்த தொகுதியின் ஸ்டோர் ரூமில் வைக்கப்பட உள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், தற்போது வரை 7 கோடியே 83 லட்சம் மதிப்புள்ள ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 2 கோடியே 35 லட்சம் மதிப்புள்ள 8,046 கிராம் தங்கம் மற்றும் 15 லட்சம் மதிப்புள்ள 12 ஐ-போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்றார். இதனையடுத்து, வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது ஏற்பட்ட பிரச்னை குறித்த கேள்விக்கு, "வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது டோக்கன் அடிப்படையில் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐந்திற்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளே அனுமதிக்கப்படக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமீறல் எதுவும் நடந்துள்ளதா, அரசியல் கட்சிகளின் குழப்பமா அல்லது தேர்தல் நடத்தும் அலுவலரின் கவனக் குறைவா என்று விசாரணை அறிக்கை கேட்டுள்ளோம்.

இதுவரை வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு 23 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் 9 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மொத்தமாக சென்னையில் 52 மனுக்கள் பெறப்பட்டுள்ளன" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 405 பேர் வேட்புமனு தாக்கல்.. எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா? - TN Filed nominations LIST

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.