ETV Bharat / state

சென்னையில் 16 தொகுதிகளில், 39 லட்சம் வாக்காளர்கள்: பட்டியலை வெளியிட்டார் தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 22, 2024, 3:09 PM IST

பட்டியலை வெளியிட்டார் தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன்
சென்னையில் 16 தொகுதிகளில், 39 லட்சம் வாக்காளர்கள்

Chennai final voter list details: சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான, ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று (ஜனவரி 22) வெளியிட்டார்.

சென்னை: சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலில் 39 லட்சத்து ஆயிரத்து 167 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள், 2024 ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஜனவரி 1 ஆம் தேதி அன்று தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாகப் பொதுமக்களிடமிருந்து உரியப் படிவங்கள் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் 9 ஆம் தேதி வரை பெறப்பட்டன.

சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரால் நேரடி ஆய்விற்குப் பின்னர் சட்டமன்றத் தொகுதியினை சார்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்களால் படிவங்கள் ஏற்பு அல்லது நிராகரிப்பு குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான, ஜெ.ராதாகிருஷ்ணன், இன்று (ஜனவரி 22) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்ட அரங்கில் வெளியிட்டார்.

அக்டோபர் 27ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சென்னை மாவட்டத்தைச் சார்ந்த 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மொத்த வாக்காளர்களது எண்ணிக்கை விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 19 லட்சத்து ஆயிரத்து 911 ஆண்கள், 19 லட்சத்து 65 ஆயிரத்து 149 பெண்கள், 1,118 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 38 லட்சத்து 68 ஆயிரத்து 178 பேர் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இறுதி திருத்தப் பட்டியலுக்கு நீக்கம் செய்யப்பட்ட 35 ஆயிரத்து 834 பெயர்களில், 469 பேர் இறந்தவர்கள், 25 ஆயிரத்து 291 பேர் நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், மற்றும் 10 ஆயிரத்து 74 பேர் பலமுறை பட்டியலில் பதிவு செய்யப்பட்டவர்கள் என கூறப்பட்டுள்ளது.

பெறப்பட்ட 69 ஆயிரத்து 79 படிவங்கள் மீது உரிய ஆணை பிறப்பிக்கப்பட்டு துணை பட்டியல்களில் பெயர்கள் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது வாக்காளர்களது எண்ணிக்கை 68 ஆயிரத்து 823 ஆக உள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி திருத்தப் பட்டியலில் வாக்காளர்களது எண்ணிக்கை, ஆண்கள் 19 லட்சத்து 17 ஆயிரத்து 135 பேரும், பெண்கள் 19 லட்சத்து 82 ஆயிரத்து 875 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 1,157 பேரும், என மொத்தம் 39 லட்சத்து 01 ஆயிரத்து 167 வாக்காளர்கள் உள்ளனர்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொடங்கிய அதிமுக.. முக்கிய குழுக்கள் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.