ETV Bharat / state

சென்னை குற்றச்செய்திகள்: தமிழ்நாடு காவல்துறையின் முக அடையாளம் கண்டறியும் இணையதளம் முடக்கம்... - Chennai Crime News

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 10:53 PM IST

Chennai Crime News: சென்னையில் ரஷ்ய நாட்டுச் சுற்றுலாப் பயணியைத் தாக்கி செல்போன் பறிப்பு, தமிழ்நாடு காவல்துறையின் முக அடையாளம் கண்டறியும் இணையதளம் முடக்கம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் பணத்தைக் கொண்டு செல்ல உதவியதாகக் கூறப்படும் நபரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை போன்ற குற்றச்செய்திகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..

Chennai Crime News Photo
Chennai Crime News Photo (Credits to Etv Bharat Tamil Nadu)

சென்னை: சென்னையில் ரஷ்ய நாட்டுச் சுற்றுலாப் பயணியைத் தாக்கி செல்போன் பறிப்பு, தமிழ்நாடு காவல்துறையின் முக அடையாளம் கண்டறியும் இணையதளம் முடக்கம், தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் பணத்தைக் கொண்டு செல்ல உதவியதாகக் கூறப்படும் நபரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை போன்ற குற்றச்செய்திகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..

தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்: கடந்த 6ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்து அதனைக் கொண்டு வந்த சதீஷ், நவீன்,பெருமாள் ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஓட்டலிலிருந்து பணம் கொண்டு வருவதாகவும் இது தேர்தல் செலவுக்காகக் கொண்டு செல்லப்படுவதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

மேலும், இந்த விவகாரத்தில் பல்வேறு நபர்களுக்குத் தொடர்பு உள்ளது எனவும், சென்னையில் பல்வேறு இடங்களிலிருந்து பணம் கைமாற்றிக் கொண்டு செல்வதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் பாஜக நிர்வாகி கோவர்தனுக்கு சொந்தமான இடங்கள், வீடுகள், ஓட்டல்களில் தாம்பரம் காவல் துறையினர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை இணைந்து சோதனை நடத்தி பணம் மற்றும் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

மேலும், இதில் பல்வேறு நபர்களுக்குச் சம்மன் அனுப்பி தாம்பரம் போலீசார் விசாரணை செய்து வாக்கு மூலங்களை வீடியோ பதிவு செய்து வைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கைத் தீவிரமாக விசாரிக்கக் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை மாற்றி டிஜிபி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களைப் பெற்ற பின்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் பணம் கொண்டு சென்று சிக்கிய மூன்று பேர் மீதும் நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மேலும், தாம்பரம் ரயில் நிலையம், சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஓட்டல், அவரது உறவினரான முருகன் இல்லம் ஆகிய இடங்களுக்குச் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், பணம் கொண்டு சென்று சிக்கிய மூவரில் நவீன், பெருமாள், சதீஷ், நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் அவரது உதவியாளர் ஆசை தம்பி உள்ளிட்டவர்களிடம் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி நேரில் வரவைத்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அவர்களிடம் இந்த பணம் யாருடையது எங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது யாருக்குக் கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை செய்தனர். சுமார் பத்து மணி நேரம் அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டன. அவர்கள் அளித்த வாக்குமூலத்தை சிபிசிஐடி போலீசார் வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளனர்.

மேலும், பணத்தைக் கொண்டு செல்ல உதவியாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஜெய்சங்கர் என்பவரிடம் நேற்று சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து இவர்கள் கொடுத்துள்ள அனைத்து வாக்கு மூலங்களையும் அடிப்படையாக வைத்து நயினார் நாகேந்திரனுக்குச் சம்மன் அனுப்பி விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் ரஷ்ய நாட்டுச் சுற்றுலாப் பயணி தாக்கி செல்போன் பறிப்பு: சென்னை மெரினா கடற்கரையில் நேற்று இரவு (மே.5) ரஷ்யாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது விவேகானந்தர் இல்லம் அருகே சுற்றுலாப் பயணி முகத்தில் தாக்கி விட்டு மர்ம கும்பல் ஒன்று செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

இது குறித்து அந்த நபர் சென்னை மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தமிழ்நாடு காவல்துறையின் முக அடையாளம் கண்டறியும் இணையதளம் முடக்கம்: தமிழ்நாடு காவல்துறையினர் குற்றவாளிகள், காணாமல் போனவர்கள், சந்தேகத்திற்குரிய நபரின் தரவுகள் அனைத்தும் எஃப்.ஆர்.எஸ் எனப்படும் முக அடையாளம் கண்டறியும் இணையதளத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறையின் முகம் அடையாளம் கண்டறியும் இணையதளத்தை falcon feeds என்ற பெயர் உள்ள ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இணையதளத்தில் குற்றவாளிகள் காணாமல் போனவர்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமான பல நபர்களின் தரவுகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. முதல் தகவல் அறிக்கைகள், அதில் சம்பந்தப்பட்ட நபர்களின் விவரங்கள் மற்றும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்களின் விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த இணையதளம் முடக்கப்பட்டாலும், அதில் இருக்கும் தரவுகள் யாரும் திருட முடியாது என காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் முடக்கப்பட்டதால் அதனைத் தடுக்கும் நடவடிக்கையாக இணையதள நிர்வாகி கணக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் வழியில் நேர்ந்த சோகம்.. இளைஞர் உயிரிழப்பு! - Bike Accident In Vaniyambadi

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.