ETV Bharat / state

பாஜகவில் இணையவிருக்கும் தமிழகத்தின் முக்கிய புள்ளிகள் - அரசியல் களத்தை அதிரவைக்கும் அண்ணாமலையின் பரபரப்பு பேட்டி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 10:08 PM IST

BJP State president Annamalai
தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை

BJP State president Annamalai: கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பிரதமர் வருகையின் போது கூட்டணித் தலைவர்கள் மேடையில் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று(பிப்.20) பாஜக-வின் மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "பாஜகவின் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின் சமூக ஊடகப் பிரிவின் ஒரு நாள் பயிற்சி முகாம் ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தலைமையில் இன்று(பிப்.20) நடைபெற்றது.

10 ஆண்டுகளில் 11 மடங்கு அதிகமாகச் செலவு செய்துள்ளோம். 18 இலட்சம் கோடி நகர்ப்புற வளர்ச்சித் துறைக்காகச் செலவு செய்துள்ளோம். உலகிலேயே கடந்த 2 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைத்தது இந்தியா மட்டும் தான். 2021ஆம் ஆண்டில் பெட்ரோல் டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்போம் என்று தேர்தல் அறிக்கையில் கூறிய திமுக தற்போது வரை குறைக்கவில்லை.

வரும் 27ஆம் தேதி பல்லடத்தில் 'என் மண், என் மக்கள்' நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார். 27ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள். 28ஆம் தேதி பிரதமர் அலுவலகத்திலிருந்து, மாநில அரசிற்கான ஒரு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அந்த நிகழ்ச்சி குறித்து அரசு அறிவிக்கும்.

2015ஆம் ஆண்டில் மண்வள அடையாள அட்டையை ஒன்றிய அரசு கொண்டுவந்தது. முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மத்திய அரசு நிதி பங்களிப்பை வழங்கியுள்ளது. இராமநாதபுரம், நாகையிலிருந்து மீனவர்களை அழைத்துச் சென்று நேற்று(பிப்.20) டெல்லியில் மத்திய அமைச்சர்களைச் சந்தித்தார்கள். தமிழகத்திற்கு வெள்ளப் பாதிப்பு நிதியாக எஸ்.டி.ஆர்.எப் நிதியாக 450 கோடி வழங்கியுள்ளோம்.

பல போராட்டங்களுக்கு இடையே தான் மத்திய அரசின் திட்டங்கள் மாநிலங்களுக்குச் சென்று சேர்கிறது. கூட்டணி தொடர்பாக பாஜகவின் கதவுகள் மட்டுமல்ல ஜன்னலும் திறந்து தான் உள்ளது. அடுத்த இரண்டு மூன்று நாட்களில் மக்கள் அதிகாரம் அளித்த தமிழகத்தின் முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணைய உள்ளனர். பாஜக எம்எல்ஏ-க்களுக்கு சட்டப்பேரவையில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. அமைச்சர்கள் பேசுவதற்கு முன்பு அப்பாவு பேசி விடுகிறார்‌" என்று குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: "அனைத்து விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்" - ஜி.கே.மணி கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.