ETV Bharat / state

"வேளாண் பட்ஜெட்டில் தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டம் எதுவும் இல்லை" - வானதி சீனிவாசன் விமர்சனம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 9:03 PM IST

Vanathi Srinivasan Reaction on Agri Budget
விவசாய பட்ஜெட் குறித்து வானதி சீனிவாசன் கருத்து

Vanathi Srinivasan Reaction on Agri Budget 2024: தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு என்று தொலைநோக்குப் பார்வை கொண்ட திட்டம் எதுவும் இல்லாமல் உள்ளது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

விவசாய பட்ஜெட் குறித்து வானதி சீனிவாசன் கருத்து

சென்னை: 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) தாக்கல் செய்துள்ள நிலையில், மொத்த பட்ஜெட் மதிப்பீடு ரூ.42,281 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறும்போது, "விவசாயத்துறை பட்ஜெட்டில், தனியாக விவசாயிகளுக்கு என்று தொலைநோக்குப் பார்வை கொண்ட திட்டம் எதுவும் இல்லாமல் உள்ளது. தமிழ் இலக்கியங்களில் உள்ள சீவக சிந்தாமணி, திருக்குறள் உள்ளிட்டவற்றில் இருந்து நல்ல பாடல்களை எடுத்துக்கொண்டு மத்திய அரசின் திட்டங்களாக இருக்கக்கூடிய திட்டங்களை எடுத்துப் போட்டு இந்த வேளாண் பட்ஜெட் உருவாகப்பட்டுள்ளது.

இதுமட்டும் அல்லாது, இந்த நிதிநிலை அறிக்கையில் 60 முதல் 70 சதவீதம் இடத்தில் மத்திய அரசு நிதியுடன் இணைந்து என்று குறிப்பிட்டு இருக்கின்றனர். அனைத்தையும் ஒருங்கிணைத்து, தனியான பட்ஜெட்டை கொடுப்பது போல் கொடுத்திருக்கின்றனர்.

தமிழ்நாடு போல் அதிகம் நகரப்புற மயமாதல் உள்ள மாநிலத்தில் நமக்கு இருக்கும் சவால் என்ன விவசாய நிலப்பரப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன. விவசாயத் தொழிலாளர்கள் விவசாயத்திலிருந்து விலகி வருகின்றனர். இதனால் லாபம் இல்லாத தொழிலாக விவசாயம் இருந்து வருவது.

இதற்குத் தீர்வு சொல்லும் வகையில் வேளாண் பட்ஜெட்டில் எதுவும் இல்லை. மத்தியத் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் இருக்கும் இளைஞர்களுக்குப் புதிதாகத் தொழிற்சாலை வருவதற்கு வாய்ப்பு இல்லை.

ஆகவே அந்த இளைஞர்களுக்கு, விவசாயம் சார்ந்த தொழில்களை உருவாக்கி அதில் வேலை வாய்ப்பைக் கொண்டு வரும் வகையிலும் இந்த வேளாண் பட்ஜெட் இல்லை. இதனால் சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள இளைஞர்கள் திரும்பவும் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் நிலை தான் வரும்.

பழங்கால நூல்களிலிருந்து பல்வேறு உதாரணங்கள் எடுத்துச் சொன்னாலும் அதில் உள்ள விதைகள் விவசாயிகளுக்குக் கிடைக்கும் நிலையில் இல்லை, விவசாயிகளுக்குக் கொடுத்தாலும் அது லாபம் அளிக்குமா என்பதற்குப் பதில் இருப்பதாக வேளாண் பட்ஜெட்டில் இல்லை.

கரும்பு விவசாயிகள் இழப்பைச் சந்திக்கின்றனர். சர்க்கரை ஆலைகள் லாபத்திற்கு ஓட முடியாத நிலை உள்ளது. ஆயிரக் கணக்கான விவசாயிகள் கரும்பை அறுவடை செய்து கொடுத்து பணம் கொடுக்க முடியாத நிலை உள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் பயிர்கள் உள்ளன ஒரு கிராமம் ஒரு பயிர் என்று திட்டம் அறிவித்துள்ளார்கள். இதனைப் போன்ற திட்டங்களை அறிவிப்பதுடன் சரி, அதனைச் செயல்படுத்துவது கிடையாது.

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை போன்ற இடங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தென்னை மரங்களில் ஏற்படும் வாடல் நோய் காரணமாகத் தென்னை விவசாயிகள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். இதற்குத் தீர்வு கண்டுபிடித்து விவசாயிகளுக்குக் கொடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை.

மேலும், ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் கொடுக்க வேண்டும் என்பது தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஆனால், வெளிநாட்டு எண்ணெய்க்கு மானியம் கொடுத்து இறக்குமதி செய்கின்றனர். இன்றைய முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது இது குறித்துப் பேசியுள்ளார். ஆனால் தற்போது, வேளாண் பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு இல்லை" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட் 2024: 'ஒரு கிராமம் ஒரு பயிர்' புதிய திட்டம் அறிமுகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.