ETV Bharat / state

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த பாஜக உறுப்பினர் உமா ஆனந்த்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 6:59 PM IST

பாஜக உறுப்பினர் உமா ஆனந்த்
பாஜக உறுப்பினர் உமா ஆனந்த்

BJP Uma Anand: சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில், மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை, சிறிய குறைகளைத் தவிர்த்து, பாராட்டுக்குரியதாகும் என்று பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் தெரிவித்தார்.

சென்னை: சென்னை மாநகராட்சியின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா நேற்று (பிப்.21) தாக்கல் செய்தார். இந்த நிலையில், 2024-25ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் இன்று (பிப்.22) நடைபெற்றது.

இதில், பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த், தனியார் கோசாலைகளில் சென்னை மாநகராட்சி நெறிமுறைகள் கொண்டுவரப் போகிறதா? என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ்குமார், மாடு வளர்ப்போர் தனியார் இடங்களில் மாடு வளர்க்க எந்தத் தடையும் இல்லை, தெருவில் சுற்றித் திரியும் மாடுகளைக் கைப்பற்றத் தான் நடவடிக்கை பொருந்தும் என்றார்.

அதனைத் தொடர்ந்த பேசிய மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த், சிசிடிவி கேமராக்கள் சாலைகள் மற்றும் பள்ளிகளில் எங்கு அமைக்க வேண்டும் என்பதை யார் முடிவு செய்கிறார்கள்? காவல் துறை மட்டும் எப்படி முடிவு செய்து கேமராக்கள் அமைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த துணை மேயர் மகேஷ்குமார், சாலைகளில் கேமராக்கள் பொருத்துவது போக்குவரத்து காவல் துறை தான் மாநகராட்சி இல்லை எனப் பதிலளித்தார்.

மேலும், இந்தச் சிறிய குறைகளைத் தவிர்த்து, இது பாராட்டுக்குரிய நிதி நிலை அறிக்கை என்று உமா ஆனந்த் கூறியதற்குத் துணை மேயர் மகேஷ்குமார் நன்றி தெரிவித்தார். இடையில், திராவிட மாடல் என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன் என்று உமா ஆனந்த் கூறிய போது, திமுக உறுப்பினர் உங்கள் வாயால் அவையில் திராவிட மாடல் எனப் பதிவு செய்து விட்டீர்களே என்று கூறி மேசைகளைத் தட்டி ஒலி எழுப்பினர்.

இதையும் படிங்க: சென்னையில் அதிநவீன சாலைக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு - பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.