ETV Bharat / state

"இந்தியா கூட்டணி என்பது ஒன்று ஜெயில் அல்லது பெயில்" - அரியலூரில் ஜெ.பி.நட்டா பேச்சு! - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 3:45 PM IST

JP NADDA IN ARIYALUR
JP NADDA IN ARIYALUR

JP NADDA IN ARIYALUR: தமிழ்நாடு என்பது மோடிக்கு மிகுந்த பாசத்தையும், அன்பையும் தரக்கூடிய மாநிலம் எனவும், இந்தியா கூட்டணியின் மொத்த கொள்கையே ஊழல் என சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

அரியலூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சி வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, இன்று அரியலூர் கொல்லாபுரம் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்தார்.

கூட்டத்தில் பாஜக தேசியத் தலையர் ஜெ.பி.நட்டா பேசுகையில், “பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அதன் தொன்மை ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆனால், திமுக இந்த தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை அழித்து வருகின்றது. பாரத பிரதமர் மோடி 'மேக் இன் இந்தியா' என்ற திட்டத்தின் கீழ், உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் இந்தியாவில் அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தார்.

அதன் அடிப்படையில், 90 சதவீத மொபைல் போன்கள் தற்பொழுது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆட்டோ மொபைல் உற்பத்தியில் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் கோலோச்சி வந்த நிலையில், உலக அளவில் இந்தியா ஆட்டோ மொபைல் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ளது. சுகாதாரத் துறையில் மருந்து உற்பத்தியில் கரோனாவில் மிகப்பெரிய பங்கினை இந்தியா உலகிற்கு செய்துள்ளது.

மிகக் குறைந்த விலையில் மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. மோடி, ஏழை மக்களின் முன்னேற்றம், வளர்ச்சி மிகுந்த பெண்கள், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு உற்பத்தி மற்றும் விலைப் பட்டியல் என மக்களுக்கு வாழ்க்கை மேம்பட ஐந்து கொள்கைகளில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

இந்தியாவில் 10 கோடி பெண்களுக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் 40 லட்சம் தமிழ்நாட்டிற்கும், குறிப்பாக 2.5 லட்சம் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது போன்று 'ஜல்ஜீவன்' திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதில், இந்தியா முழுவதும் 11 கோடியே 40 லட்சம் இணைப்புகளும், தமிழ்நாட்டில் 80 லட்சம் இணைப்புகளும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு 4 லட்சம் குடிநீர் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.

குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தில், இந்தியா முழுவதும் 4 கோடி வீடுகள் கான்கிரீட் வீடுகளாக கட்டப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் 14 லட்சம் வீடுகளும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் 43 ஆயிரம் வீடுகளும் கான்கிரீட் வீடுகளாக கட்டப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தில், ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு ஆகியவை வழங்கப்படும் திட்டத்தில், இந்தியாவின் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 25 கோடி மக்கள் தற்பொழுது வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளனர் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

மக்களுக்கு முறையான மருத்துவம் சென்றடைய வேண்டும் என்று பாரதப் பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ உதவி பெறலாம் என்ற திட்டத்தில், இதுவரை இந்தியாவில் 55 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர். இது இந்திய மக்கள் தொகையில் 40 சதவீதமாகும். தமிழ்நாடு என்பது மோடிக்கு மிகுந்த பாசத்தையும், அன்பையும் தரக்கூடிய மாநிலமாகும். தமிழ்நாட்டிற்காக சுகாதாரத் துறையில் ஆயிரத்து 650 கோடியும், கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்திற்கு 630 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், கிராமப்புற மேம்பாட்டிற்கு 10 ஆயிரத்து 840 கோடியும், ஜல்ஜீவன் திட்டத்திற்கு 775 கோடியும், பிரதமர் தமிழ்நாட்டிற்கு வழங்கி உள்ளார். ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஏழு மடங்கு நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது நெடுஞ்சாலை வசதிகள் ஆயிரத்து 478 கோடிக்கு மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு தளவாட உற்பத்தி கேந்திரமாக தமிழ்நாட்டை உருவாக்கி, அதில் சென்னை, திருச்சி, ஓசூர், கோயம்புத்தூர், சேலம் ஆகிய ஐந்து இடங்களில் 12 ஆயிரம் கோடியில் தளவாடப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

11 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்றப்படும் திட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சென்னையும், பெங்களூரும் தொழிற்சாலை காரிடர் நகரங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தமிழ்நாட்டில் மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களை மோடி வழங்கி வருகிறார். இதே வேளையில், இந்தியாவில் இந்தியா கூட்டணி என்ற ஒன்று உருவாகியுள்ளது. இந்த கூட்டணியின் மொத்த கொள்கையே ஊழல்.

மோடி ஊழலை ஒழிப்பேன் என்று சபதமிட்டு பணியாற்றி வருகிறார். தமிழ்நாட்டில் திமுக என்றால் வாரிசு அரசியல். மணி லாண்டரி, கட்டப்பஞ்சாயத்து என்பது அர்த்தமாகும். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே வாரிசு அரசியலையே முன்னிறுத்தி உள்ளது. இது அந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும்.

இது போன்று, இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளன. பரத் அப்துல்லா காமன்வெல்த் கிரிக்கெட் ஊழல், லாலு பிரசாத் மாட்டுத்தீவன ஊழல், அகிலேஷ் யாதவ் லேப்டாப் ஊழல், கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை ஊழல், திமுக - கருணாநிதி குடும்பம் வருமான வரி ஊழல் உள்ளிட்ட ஊழலில் சிக்கித் தவிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் சோனியா, ராகுல், சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட அனைவருமே தற்பொழுது பெயில் வாங்கி வெளியில் உள்ளனர்.

இந்தியா கூட்டணி என்பது ஒன்று ஜெயில் அல்லது பெயில் என்ற ஊழல் கட்சியாகவே உள்ளது. எனவே, இந்த ஊழலை ஒழிக்க மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர, நீங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் கார்த்தியாயினி, வேலூர் மேயராக இருந்து 24 மணி நேரம் மக்கள் பணியாற்றியவர். எனவே, இவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.

கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஹெச். ராஜா, வேட்பாளர் கார்த்தியாயனி, மாவட்டத் தலைவர் ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: திமுக தேர்தல் அறிக்கை 2024; “கோவையில் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! - Coimbatore Cricket Stadium

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.