ETV Bharat / state

விஜயின் அரசியல் வருகை; "மக்கள் தான் முடிவெடுப்பார்கள்" - அண்ணாமலை சூசகம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 10:36 PM IST

விஜய் குறித்து அண்ணாமலை
விஜய் குறித்து அண்ணாமலை

Annamalai about Vijay: இது ஒரு கடினமான பயணம், எளிமையான பயணம் கிடையாது, ஒவ்வொரு வாக்காக, ஒவ்வொரு சிந்தனையாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விஜய் குறித்து அண்ணாமலை

திருப்பத்தூர்: என் மண் என் மக்கள் நடைபயணத்தை மேற்கொள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இன்று (பிப்.03) ஆம்பூருக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை நடிகர் விஜய் குறித்து பேசுகையில், “புதியதாக யார் அரசியலுக்கு வந்தாலும், அவர்களை பாரதிய ஜனதா கட்சி வரவேற்கும். விஜய் ஒரு நோக்கத்துடன் வந்துள்ளார். மக்களுக்கு எப்போதுமே வாய்ப்புகள் இருக்க வேண்டும், ஒவ்வொரு கட்சியும் தனது கொள்கையை முடிவு செய்த பின்னர், மக்கள் முடிவு செய்வார்கள்.

தமிழக மக்கள் இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆழ்ந்து, சிந்தித்து ஊழல் இல்லாத சமூகத்தை யார் கொடுக்க முடியும் என்ற வாதத்தை, எல்லா கட்சியும் முன்வைக்கும் முன் மக்கள் முடிவெடுப்பார்கள். அதனால் அரசியலுக்கு வரக்கூடிய நடிகர் விஜய்க்கு எங்களது வாழ்த்துகளை தெரிவிப்பது மட்டுமல்லாமல், இது ஒரு கடினமான பயணம், எளிமையான பயணம் கிடையாது.

ஒவ்வொரு வாக்காக, ஒவ்வொரு சிந்தனையாக கொண்டு வர வேண்டும். தமிழக மக்களுக்கு அவரது எண்ணத்தை வெளிப்படுத்தப் போகிறார், மக்கள் முடிவு எடுக்க வேண்டும். 2026-இல் களம் எப்படி அமைகிறது என பார்ப்போம்” என தெரிவித்தார்.

முன்னதாக, நடைபயணத்தின் போது மக்களைச் சந்தித்து அண்ணாமலை பேசுகையில், “வாணியம்பாடியின் மிகப்பெரிய பிரச்னை இங்குள்ள தோல் தொழிற்சாலைகள். இதனால் மாசு ஏற்படுத்துவதால், வட தமிழகத்தின் ஜீவாதாரமான பாலாறு நீர் குடிக்க கூட முடியாத நீராக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்காக தோல் தொழிற்சாலைகளுக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியும், மாநில அரசு தனது மெத்தனப்போக்கால் சுகாதார நிலையம் கட்ட எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இன்னும் 10 ஆண்டுகளில் பாலாறு இருக்காது, உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்கலாம், இந்த பக்கம் ஒரு நதி போனது என்று.

நியூடவுன் ரயில்வே மேம்பாலம் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியும், மாநில அரசு அதற்கான நிலம் கையக்கப்படுத்தும் பணியை மேற்கொள்ளாததால் மேம்பாலம் அமைக்கும் பணி தள்ளிப் போய்க்கொண்டே இருக்கின்றது. தமிழகத்திலேயே நகர்புற பிரச்னைகள் அதிகம் உள்ள நகரமாக வாணியம்பாடி உள்ளது.

வெறும் அரசியல் பேசி பேசியே அடிப்படை பிரச்னைகளை சரிசெய்யாமல் இருக்கின்றனர். வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் இதே நிலைமை நீடித்தால் 15 வருடங்களில் மக்கள் இங்கு வசிக்க மாட்டார்கள். வெறும் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். 2024ஆம் ஆண்டு மோடிதான் ஆட்சி அமைப்பார், அது குழந்தைக்கும் தெரியும். அது 400 தொகுதியா அல்லது 450 தொகுதியா என்பதுதான் சந்தேகம்.

வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் நடத்தும் பள்ளியில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகள் சொல்லி கொடுக்கிறார்கள். ஆனால் வெளியே சொல்கிறார்கள், நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் என்று. இன்னும் 25 வருடங்களில் உலகின் மையப்புள்ளி இந்தியாவை நோக்கி வரும். அப்பொழுது அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஐந்து மொழிகளைக் கொண்டு வருவோம். 2024ஆம் ஆண்டு வடிகட்டிய முட்டாள்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். இவர்கள் நடத்தும் பள்ளிகளில் நீட் பயிற்சி அளிப்பார்கள். ஆனால், வெளியே நாங்கள் நீட்டை எதிர்ப்போம் என மைக் பிடித்து பேசுகிறார்கள்.

கதிர் ஆனந்திற்கு துரைமுருகன் மகன் என்ற ஒரே தகுதி மட்டுமே உள்ளது. அவர் பாலாற்றைப் பற்றி பேசினாரா, நல்ல தண்ணீரைக் கொடுப்போம் என பேசினாரா? அவர்கள் தற்குறிகள், ஆட்சியில் இருக்க பதவி வெறி பிடித்த பேய்கள். ஓட்டு அரசியலை வைத்து மக்கள் மனதில் நஞ்சைத் தடவி மதவாத அரசியல் செய்கிறார்கள். மோடிக்கு எதிராகப் போடும் ஒவ்வொரு ஓட்டும் குப்பைக்கு தான் போகும் என்பது உங்களுக்குத் தெரியும். 55 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம்” என பேசினார்.

இதையும் படிங்க: விஜயின் அரசியல் யாரை எதிர்க்கிறது? யாருடைய ஓட்டுக்கு வேட்டு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.