ETV Bharat / state

'அண்ணாவின் கொள்கைகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஆட்சி' - அண்ணாமலை குற்றச்சாட்டு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2024, 7:35 AM IST

Annamalai alleges that there is an opposite reign run Anna policies in Tamil Nadu
தமிழகத்தில் அண்ணாவின் கொள்கைகளுக்கு எதிரான ஆட்சி நடந்து வருவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

K.Annamalai: தமிழகத்தில் தற்போது அண்ணாவின் கொள்கைகளுக்கு நேர்எதிரான ஆட்சி நடைபெற்று வருவதாக காட்பாடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

வேலூர்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 87-வது நாளாக "என் மண் என் மக்கள்" நடை பயணம் மூலம் பாஜக அரசின் சாதனைகளை மக்களிடையே விளக்கி வருகிறார். அதன்படி, வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று (பிப்.4) நடைபயணம் மேற்கொண்டார். அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய அண்ணாமலை, "பேரறிஞர் அண்ணா நினைவு நாளை பல்வேறு கட்சியினரும் அனுசரிக்கும் இந்நேரத்தில், தனக்குப் பிறகு தன் வாரிசு யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்ற அவரது தீவிர கொள்கைக்கு நேர் எதிரான ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதனை மக்கள் மறந்துவிடக் கூடாது.

மேலும், சாராய கடை வருவாய் தொழுநோயாளியின் கையில் பெறும் வெண்ணெயைப் போன்றது என்று கூறிய பேரறிஞர் அண்ணாவுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி, மதுக்கடைகளை திறந்து வைத்தார். தற்போது அது வளர்ந்து கடந்தாண்டு ரூ.44 ஆயிரம் கோடியாகவும், தற்போது ரூ.52 ஆயிரம் கோடியாகவும் அதிகரித்துள்ளது.

அண்ணா மறைந்தபோது, அவர் பற்றி தவறாக பேசி விட்டதாகக் கூறி, நாட்டில் சனாதன தர்மத்தை வளர்த்த கிருபானந்த வாரியார் பூஜை அறையில் திமுகவினர் புகுந்து தாக்குதல் நடத்தினர். அவ்வாறு தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் இறக்கும் தருவாயில் இருந்தபோது, அவரது இல்லம் தேடிச்சென்று ஆசி வழங்கினார், கிருபானந்த வாரியார்.

காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ-வான துரைமுருகன் தமிழக நீர்வளத்துறை அமைச்சராக உள்ளார். ஆனால், கர்நாடகாவில் மேகதாது அணை, கேரளா மாநிலத்தில் முல்லை பெரியாறு அணை விவகாரங்களில் தீர்வு ஏற்படுத்தாமல் அவை தீவிரம் அடைந்துள்ளன. அதேபோல், அத்திக்கடவு அவிநாசி திட்டமும் (Athikadavu Avinashi Scheme - AAS) தொடர்ந்து பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் இழுபறி செய்யப்பட்டுக் கொண்டுள்ளது.

அந்தவகையில் தமிழகத்தில் லஞ்சம், குடும்ப அரசியல், சாதி அரசியல், அடாவடி அரசியல் ஆகியவற்றின் மொத்த இலக்கணமாக விளங்கும் திமுகவை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்து, மீண்டும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியைக் கொண்டு வர மக்கள் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: எந்த நேரத்திலும் எம்பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தலாம் - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.