ETV Bharat / state

ஜிஎஸ்டியில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் - டி.கே.எஸ் இளங்கோவன் பேச்சு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 9:40 PM IST

திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் பேச்சு
ஜிஎஸ்டியில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்

TKS Elangovan about GST: ஜிஎஸ்டியால் மக்கள் பல சிரமங்களைச் சந்தித்து வரும் நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் என்ன மாற்றங்களை, திருத்தங்களை கொண்டு வர வேண்டும், முடிந்தால் ஜிஎஸ்டியை ரத்து செய்வது பற்றியும் நடவடிக்கை எடுப்போம் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் திமுக சார்பில் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்துக்கணிப்பு கூட்டம், இன்று (மார்ச் 2) நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ் விஜயன், எழிலன் நாகநாதன், சென்னை மேயர் பிரியா மற்றும் தஞ்சை தொகுதி எம்பி பழநிமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள் ஆகியோரிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.கே.எஸ்.இளங்கோவன், “எங்களுடைய நோக்கம் தேர்தல் அறிக்கை என்பது, மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்கிற காரணத்தால் மக்களிடமே கேட்டு, என்ன தேவை என்பதை அறிந்து, அதனை தேர்தல் அறிக்கையாக வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கூடியிருக்கிறோம்.

மனுக்கள் பெறும் சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவடைந்து, நாளை முதல் குழுவினர் கூடி மனுக்களை பரிசீலித்து, எந்த அளவிற்கு தேர்தல் அறிக்கையில் இணைக்கலாம் என்பதை முடிவு செய்து தேர்தல் அறிக்கையில் இணைப்போம். பெரும்பாலான மனுக்கள் ஒன்றிய அரசிடம் ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, ஜிஎஸ்டியில் சந்திக்கும் சிரமங்கள் ஆகியவற்றை சொல்லி இருக்கிறார்கள்.

இவற்றிற்கு நிவாரணம் தேவை, இவை மத்திய அரசு செய்யக்கூடியது. இந்த தேர்தலைப் பொறுத்தவரை, மாநிலங்கள் வஞ்சிக்கப்படுகின்றன. ஜிஎஸ்டி வரிவிதிப்பு வந்த பிறகு, மாநில அரசுக்கான நிதியை ஒன்றிய அரசு தங்களுக்கு வேண்டிய மாநிலங்களுக்கு அதிக பங்களிப்பையும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு குறைவான பங்களிப்பையும் வழங்கி வருகிறார்கள்.

இது வளர்ந்து வரும் மாநிலங்களுக்குச் செய்யும் துரோகம். ஆகவே, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் என்ன மாற்றங்களை, திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும், முடிந்தால் ஜிஎஸ்டியை ரத்து செய்துவிட்டு முன்பு போல விற்பனை வரி, வருமான வரி என இரண்டாக பிரிப்பது பற்றி கோரிக்கை வைப்போம்" என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் அசோக்குமார், நீலமேகம், மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பாஜக முதலில் 3% அப்புறம் 30% - அமைச்சர் ரகுபதி சொல்லும் கணக்கு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.