ETV Bharat / state

“பொன்முடி அமைச்சரானால் நாங்க கோர்ட்டுக்கு போவோம்” - அதிமுக வழக்கறிஞர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 3:51 PM IST

பொன்முடி அமைச்சரானால் அதிமுக நீதிமன்றத்தை நாடும்
பொன்முடி அமைச்சரானால் அதிமுக நீதிமன்றத்தை நாடும்

I.S.Inbadurai: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தால் அது சட்ட ரீதியான தவறாகும். அவருக்கு பதவி பிரமானம் செய்து வைத்தால் அந்த விவகாரம் தொடர்பாக அதிமுக நீதிமன்றத்தை நாடும் என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில், மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பொன்முடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதனால் அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த வழக்கின் மேல்முறையீட்டில், உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு, இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் திரும்பப்பெற்றது. இதனையடுத்து, பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

அதேநேரம், பொன்முடியை அமைச்சராக மீண்டும் நியமிக்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மார்ச் 13 கடிதம் எழுதினார். ஆனால், தமிழக ஆளுநர் ஏற்கனவே திட்டமிட்டபடி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். இதனையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முடித்து வந்து பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “உச்ச நீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கவில்லை. சார்ஜஸ் அப்படியே இருக்கிறது. ஆகவே, பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க இயலாது. மேலும், இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக அமையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொன்முடியை அமைச்சராக நியமிக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம் தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ஆளுநர் மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைத்தால் அதிமுக நீதிமன்றத்தை நாடும் என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது, “ தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று தேர்தல் நடத்தை விதிமுறையில் உள்ளது.

இந்த சமயத்தில், அதிமுக பாஜக இடையே திரைமறைவில் ஒப்பந்தம் நடக்கிறது என்று தனியார் செய்தி நாளிதழ் வெளியிட்டுள்ள அவதூறு செய்தி கண்டிக்கத்தக்கது. உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிட்ட நாளிதழ் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மீது பதியப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கவில்லை. அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், திமுக அரசு பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவது ஏற்புடையது அல்ல. அவ்வாறு, ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தால் அது சட்ட ரீதியாக தவறு. அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தால் அந்த விவகாரம் தொடர்பாக அதிமுக நீதிமன்றத்தை அதிமுக நாடும். மேலும், தேர்தல் பத்திரம் தொடர்பாக, திமுக வாங்கிய நிதி எவ்வளவு என்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக திமுக இயற்றிய சட்டம் வலுவற்றது” என்று குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: “பொன்முடி நிரபராதி என தீர்ப்பளிக்கவில்லை” - பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.