ETV Bharat / state

பொள்ளாச்சி அருகே குடிநீர்க் குழாய் அமைக்கப்பட்டதில் முறைகேடு; அதிமுக கவுன்சிலர் தர்ணா!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 8:25 PM IST

அதிமுக கவுன்சிலர் தர்ணா
அதிமுக கவுன்சிலர் தர்ணா

AIADMK councillor protest: பொள்ளாச்சி அருகே முறைகேடாகப் பதிக்கப்பட்ட குடிநீர்க் குழாய்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அதிமுக ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பொள்ளாச்சி அருகே குடிநீர்க் குழாய் அமைக்கப்பட்டதில் முறைகேடு; அதிமுக கவுன்சிலர் தர்ணா!

கோவை: பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 39 ஊராட்சிகளில் பெரும்பாலான வளர்ச்சித் திட்டப் பணிகளில் முறைகேடு நடந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஒன்றிய கவுன்சிலர்களுக்கு எந்த தகவலும் தெரிவிப்பதில்லை என்றும், புகார் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மூலனூர் ஊராட்சியில் குடிநீர் குழாய் பதிப்பதில் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவருக்கும், அப்பகுதியின் ஒன்றிய அதிமுக கவுன்சிலருக்கும் மோதல் ஏற்பட்டது. முறையாக அனுமதி பெறாமல் குடிநீர்க் குழாய் பதிப்பதாகப் புகார் கூறியதால் அதிமுக கவுன்சிலரை, திமுக ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒன்றிய குழு தலைவர் விஜயராணி தலைமையில் நேற்று கூட்டம் துவங்கியது. அப்போது முறைகேடான குடிநீர் இணைப்பு குறித்து புகார் எழுப்பியதற்காகத் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முறைகேடாகப் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அதிமுக ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

நீண்ட நேரமாக அவர் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியும், உரியப் பதில் அளிக்க அதிகாரிகள் முன் வரவில்லை. இதனால் சக கவுன்சிலர்கள் கூச்சல் எழுப்பியதால் நீண்ட நேரமாகப் பெரும் பரபரப்பு நிலவியது. பல மணி நேரம் போராட்டம் தொடர்ந்த நிலையில், ஒரு வழியாகப் பொறியாளர் தாமோதரதாஸ் கூட்ட அரங்கிற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலரிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் முறைகேடாகப் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் உடனடியாக அகற்றப்படும் என அவர் உறுதியும் அளித்தார். இதில் சமாதானம் அடைந்த கவுன்சிலர் நாகராஜ் போராட்டத்தைக் கைவிட்டார்.

இதையும் படிங்க: கோவையில் ஸ்டாலின்; பெண்கள் இருக்கும் பகுதியில் 10 பெண் நிர்வாகிகள் இருக்க வேண்டும் - அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.