ETV Bharat / state

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வின் மகன் மீது வரதட்சனை புகார் - ஆவடி காவல் ஆணையரகத்தில் மருமகள் புகார்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2024, 9:13 PM IST

KP Kandan daughter in law
அதிமுக எம் எல் ஏ கந்தன் மீது மருமகள் புகார்

KP Kandan daughter in law: வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக சோழிங்கநல்லூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி கந்தன் மற்றும் அவரது மகன் சதீஷ் குமார் ஆகியோர் மீது மருமகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: சோழிங்கநல்லூரை சேர்ந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.கந்தனின் மகன் கே.பி.கே சதீஷ்குமார். தற்போது சென்னை பெருநகர மாநகராட்சி 182வது மாமன்ற உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏ-வின் மருமகள் சுருதி தரப்பில், கந்தன் மற்றும் சதீஷ்குமார் மீது வரதட்சணை புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

சதீஷ்குமாருக்கும் அம்பத்துரை சேர்ந்த ஸ்ரீகாந்த என்பவரது மகள் சுருதி என்பவருக்கு கடந்த 2018 ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 600 சவரன் நகைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், மேலும் 400 சவரன் நகைகள் கேட்டு இரண்டு ஆண்டுகளாக கொடுமைப்படுத்தியதாக முன்னாள் எம்எல்ஏவின் மருமகள் தரப்பில் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

அந்த புகாரில், "நான் ஸ்ரீகாந்த் (58), மரக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறேன். மேலும் கட்டுமானத் தொழில் செய்து வருகிறேன். எனது மகள் சுருதி பிரியதர்ஷினி, மருத்துவராக பணி புரிந்து வருகிறார். எனது மகள் சுருதிக்கும் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தற்போது சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.பி.கந்தன் மகன் சென்னை மாநகராட்சி அதிமுக 182வது மாமன்ற உறுப்பினராக இருக்கும் கே.பி.கே.சதிஷ்குமார் அவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெரியவர்களால் நிச்சயக்கப்பட்டது.

கே பி.கே சதீஷ்குமாருக்கு வரதட்சணையாக ரொனால்டோ ரேடோ வாட்ச், வைர பிரேஸ்லட், தங்க செயின், வைர மோதிரம் போட வேண்டும் என்றும் கேட்டனர். திருமணத்திற்கு பெண்ணிற்கு குறைந்தபட்சம் 1000 சவரன் தங்க நகைகளும் மாப்பிள்ளைக்கு 100 சவரன் தங்க நகைகளும், இரண்டு விலை உயர்ந்த கார்களும் வரதட்சனையாக வேண்டும் என்றும் திருமணம் அடையாரில் உள்ள ராமசந்திர கன்வென்சன் சென்டரில் நடத்த வேண்டும் என்றனர்.

இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 25.04.2018ல் தங்க நகை 600 சவரன், வெள்ளி 20 கிலோ, விலை உயர்ந்த 2 சொகுசு கார்கள் வரதட்சனையாக கொடுக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இரண்டு வருடம் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் 2019 ஜூலை பெண் குழந்தை பிறந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மருமகள் சுருதியை மீண்டும் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினர்.

இதெல்லாம் பொறுத்துக் கொண்ட சுருதி 2021ஆம் ஆண்டு மே மாதம் கே.பி கந்தன், மாமியார் கே.பி.கே.சந்திரா, கே.பி.கே.இந்துமதி, கே.பி.கே சதீஷ்குமார் ஆகியோர் எனது மகளை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியே துரத்தினர். எங்கு செல்வது தெரியாமல் அம்பத்தூரில் உள்ள என் வீட்டிற்கு வந்தடைந்தார்.

நான் கே.பி.கே.கந்தனிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் நாங்கள் கேட்ட வரதட்சணை கொடுத்தால் தான் உன் மகளை வீட்டிற்குள் சேர்ப்போம் என்று கூறினார். என் மகளை வரதட்சனை கொடுமை செய்து வாழவிடாமல் என் வீட்டிற்கு அனுப்பிவிட்ட சதீஷ்குமார், அவரின் தந்தை K.P. கந்தன், தாயார் சந்திரா, அவருடைய மகள் இந்துமதி ஆகியோர்கள் மீது வரதட்சனை கொடுமை வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் அதிநவீன சாலைக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு - பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.