ETV Bharat / state

மன்னராக இருந்தவர் இப்போது தெய்வமாகிவிட்டார் - மோடியை விளாசிய பிரகாஷ்ராஜ்! - actor prakash raj

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 12:25 PM IST

actor prakash raj: மன்னராக இருந்த பிரதமர் மோடி தற்போது தெய்வக் குழந்தையாக மாறிவிட்டதாக நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் மற்றும் பிரதமர் மோடி
பிரகாஷ் ராஜ் மற்றும் பிரதமர் மோடி (Credit -Thirumavalavan Official X Page)

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருது வழங்கும் விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று (மே 25) நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு 'அம்பேத்கர் சுடர் விருது' வழங்கப்பட்டது. விழா மேடையில் பிரகாஷ்ராஜ் பேசியதாவது,

"அரசியலில் எனக்கு நீண்ட பயணம் கிடையாது. உடம்புக்கு காயமானால், ஏதும் செய்யாமல் இருந்தால் கூட உடல்வலி தானாகப் போய்விடும். ஆனால் நாட்டுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும்போது, அதுதொடர்பாக நாம் பேசாமல் இருந்தால் அந்த பாதிப்பு அதிகமாகிவிடும்.

மக்கள் நம்பிக்கை, அன்பு காரணமாகவே இந்த நிலையில் இருக்கிறேன். ஒரு கலைஞன் குரல் கோழையாகிவிட்டால் ஒரு சமுதாயம் கோழையாகிவிடும். அரசியல் தொடர்பான புரிதல் என்னுடைய திறமையால் வந்தது அல்ல.

மாறாக அம்பேத்கர், பாரதியார், காந்தி, லங்கேஷ், மார்க்ஸ் போன்ற பலருடைய சிந்தனையைப் படித்ததன் காரணமாக வந்தது. அந்த புரிதல் இருக்கும்போது என்ன நடக்கிறது என்பது நன்றாக தெரிகிறது.

கடந்த ஒன்பது வருடங்களாகத்தான் இந்த மன்னனைப் (மோடி) பற்றிப் பேசி வருகிறேன். 10 ஆண்டுகளாக மன்னராக இருந்தவர் இப்போது தெய்வமாகிவிட்டார். மறைந்த கவுரி லங்கேஷின் தந்தை தான் என்னுடைய ஆசான். ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு எனக்கு வேலை இருக்குமா, இல்லையா? என்பது தெரியாது.

உண்மையான மன்னராய், தெய்வமகனாய் இருந்திருந்தால் நாட்டு மக்களை அவர் நேசித்திருப்பார். அவர்களுக்கான நல்லதை செய்திருப்பார். ஆனால் அவர் அதை செய்யவில்லை. அப்படி என்றால் அவர் ஒரு மனிதப் பிறவியே கிடையாது.

ஒருவருக்கு தோற்கப் போகிறோம் என்ற தெரிந்தவுடன்தான் பயம் வரும் அந்த நிலையில்தான் இங்கு ஒருவர் இருக்கிறார். இன்று ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி பணி ஓய்வு பெறும்போது, 'நான் ஆர்எஸ்எஸ்ஸில் இருந்து வந்ததில் பெருமைப்படுகிறேன்' என்கிறார்.

அப்படி என்றால் இதுவரைக்கும் அவர் கொடுத்த முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். அம்பேத்கர், பெரியார் போன்றவர்களைப் பற்றிப் பேசினால் மட்டும் போதாது. அவர்களைப் பற்றிப் படிக்க வேண்டும்.

அப்போதுதான் சனாதனத்தையும்,பாசிசத்தையும் வேரறுக்க முடியும். அரசியல்வாதிகள் 5 வருடத்திற்கு ஒருமுறை வருவார்கள்; போவார்கள். இங்கு நாம்தான் நிரந்தரமானவர்கள். சரியான நபர்களை நாம் தேர்ந்தெடுக்கவில்லை என்றால் தோற்றுப் போவது நாம்தான்" என்று பிரகாஷ்ராஜ் பேசினார்.

இதையும் படிங்க: உலக பட்டினி தினம்: விஜய் போட்ட உத்தரவு..! பட்டித்தொட்டி எங்கும் பசியைப் போக்க எடுத்த முடிவு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.