ETV Bharat / state

"வதந்திகளுக்கு இடம் தரவேண்டாம்" - அமலாக்கத்துறை சோதனை குறித்து ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 6:14 PM IST

VCK Aadhav Arjuna
ஆதவ் அர்ஜுனா

VCK Aadhav Arjuna: அமலாக்கத்துறையின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், வதந்திகளுக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதர் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "எனது அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்த செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியாகியிருந்தது. நேற்று காலை தொடங்கி, இன்று காலை வரை ஒருநாள் சோதனை நடத்தப்பட்டது.

பொதுவாழ்வில் வெளிப்படைத் தன்மையோடு இருக்க வேண்டியதன் அவசியத்தை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதன் அடிப்படையில், சோதனையின் போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் நம் தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டு சோதனை நிறைவுற்றது.

இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் வலம் வரும் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும் யாரும் இடம் தரவேண்டாம். என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழிநின்று, உறுதியோடு எனது பயணம் தொடரும்” என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீடு, அவருடைய அரைஸ் நிறுவனத்தின் அலுவலகம், போயஸ் கார்டன் வீடு, ஸ்போர்ட்ஸ் கிளப் பகுதியில் உள்ள வீடு உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகின. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு, சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிராகப் பிரச்சாரம்? விளக்குகிறார் விவசாயச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.