ETV Bharat / state

ஆன்லைன் கடன் செயலியில் மிரட்டல்.. கோவில்பட்டி பெண் தற்கொலை முயற்சி! - Online Loan App Scam Issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 6:37 PM IST

Online Loan App Scam
Online Loan App Scam

Online Loan App Scam: கோவில்பட்டியில் ஆன்லைன் கடன் செயலியில் கடன் வாங்கிய பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவோம் என்ற ஆன்லைன் கடன் செயலி கும்பலின் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அப்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி: கோவில்பட்டியில் வசித்து வரும் 42 வயது பெண் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது குடும்ப மருத்துவத் தேவைக்காக ஆன்லைன் கடன் செயலி ஒன்றில் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அந்த செயலியில் அவருக்கு 7,000 ரூபாய் வரை பணம் கடனாக கிடைத்துள்ளது. 8 நாள், 9நாள், 10நாள் என மூன்று பிரிவுகளாகப் பணத்தினை திரும்பச் செலுத்தக் கூறியுள்ளனர். அதன்படியே, கடந்த 20ஆம் தேதி வட்டியுடன் சேர்த்து ரூ.12,500 என மொத்தக் கடனையும் திரும்பச் செலுத்தியுள்ளார். ஆனால், இன்னும் தங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று அந்த பெண்ணுக்கு வாட்ஸ் அப் கால், வாட்ஸ் அப் மெசஜ் என தொடர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், ஒரு நபர் மட்டுமல்லாது பலரும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு, கூடுதல் பணத்தினை செலுத்த வலியுறுத்தித் தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும், தாங்கள் சொன்ன பணத்தினை செலுத்தாவிட்டால், அந்த பெண்ணின் புகைப்படத்தினை ஆபாசமாக சித்திரித்து, அவரது தெரிந்தவர்களின் தொலைபேசி எண்களுக்கும் அனுப்பி வைப்போம் என்றும், இணைய தளத்தில் பதிவு செய்து விடுவோம் என்றும் மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேறு வழிதெ ரியாத அந்த பெண், வெளியே கடன் வாங்கி மீண்டும் அந்த செயலிக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியுள்ளார். இருந்த போதிலும் தொடர்ச்சியாக, பணம் செலுத்த வலியுறுத்தி தொடர்ந்து மிரட்டல் வந்தால் அப்பெண் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையி, அப்பெண் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் தற்கொலை முயற்சியைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினருக்கு இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார், அந்த பெண்ணிடம் பேசி, இது குறித்து சைபர் க்ரைம் போலிசாரிடம் புகார் அளிக்கச் செய்து, இனி மிரட்டினால் பணம் தர வேண்டாம் என்றும் அந்த பெண்ணுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து அந்த பெண் கூறுகையில், "எனது குடும்பத் தேவைக்காக தெரியாமல் அந்த செயலியில் பணத்தினை கடனாகப் பெற்றேன். அனைத்தையும் முறையாகச் செலுத்திய பின்னர், கூடுதலாக பணம் செலுத்த வலியுறுத்தி மிரட்டினர். மேலும், பணம் தரவில்லை என்றால் தனது படத்தினை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவோம் என்று கூறியதால் மீண்டும் பணம் செலுத்தினேன்.

ஆனால், என்னை விடாமல் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால், கடந்த 4 நாள்களாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். இது குறித்து தெரிந்த எனது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: முருகன் கோயில் எலுமிச்சை பழம் ரூ.2.36 லட்சத்துக்கு ஏலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.