ETV Bharat / state

திருவண்ணாமலையில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 1 டன் மாம்பழங்கள், வாழை பறிமுதல்! - Department of Food Safety

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 1:12 PM IST

திருவண்ணாமலையில் செயற்கையாக ரசாயனங்கள் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழம் மற்றும் 500 கிலோ வாழைப்பழத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாழை, மாம்பழங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட வாழை, மாம்பழங்கள் (Credits-ETV Bharat Tamil Nadu)

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரில் உள்ள பல்வேறு பழ மண்டிகளில் மாம்பழங்கள் மற்றும் வாழைப்பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று காலை முதல் தேரடி வீதி மற்றும் திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நான்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் திருமஞ்சன கோபுர வீதியில் உள்ள பழ மண்டியில் எத்தனால் சொல்யூஷன் பயன்படுத்தி வாழைப்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதை கண்டறிந்தனர். குறிப்பாக இதுபோன்று பழங்கள் பழுக்க வைக்கப்படுவதால் இதனை உட்கொள்ளும் போது வயிறு உபாதைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது மட்டுமின்றி தேரடி வீதியில் உள்ள மாம்பழ மண்டியில் சோதனை செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எத்தனால் பவுச் என்று சொல்லக்கூடிய வேதிப்பொருளை வைத்து மாம்பழம் பழுக்க வைக்கப்படுவதை கண்டறிந்தனர். குறிப்பாக இதுபோன்ற மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதால் மாம்பழம் முழுவதுமாக நச்சுத்தன்மை உள்ளதாக மாறும் எனவும், இதனால் இதனை உண்ணும் போது பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் கூறுகையில் இயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழங்களுக்கும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்களுக்கும் உள்ள வேறுபாட்டினையும்,இது போன்று பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்படுவதால் பழத்தின் தன்மையும் அதனுடைய சத்தும் முழுவதுமாக கெட்டுப் போய் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், காலை முதல் 15 இடங்களுக்கு மேல் ஆய்வு மேற்கொண்டு செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் மற்றும் 500 கிலோ வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அந்த கடையின் மீது வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், இந்த சோதனை அனுதினமும் தொடரும் எனவும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இதையும் படிங்க: மீன்பிடி தடைக்காலத்தில் இன்ஜின் படகுகளில் மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும் - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு! - Fishing Prohibition Time

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.