ETV Bharat / state

"தமிழகத்தில் புதிதாக 4,200 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளது" - அமைச்சர் சிவசங்கர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2024, 5:42 PM IST

Etv Bharat
Etv Bharat

Minister Sivasankar: கடந்த வாரம் சுமார் 1,666 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு, அதில் முதல் கட்டமாக 100 பேருந்துகளைத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். மேலும், 4,200 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

"தமிழகத்தில் புதிதாக 4,200 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளது" - அமைச்சர் சிவசங்கர்!

திருவாரூர்: திருவாரூரில் தொமுச மாவட்ட தலைவர் வைத்தியநாதன் மறைவையொட்டி அவரது படத்திறப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், தாம்பரத்துக்கு 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், கிண்டிக்கு 3 நிமிடத்துக்கு ஒரு பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் ஆம்னி பேருந்துகள் இயக்கம் தொடங்கிய நிலையில், அதன் மூலம் வந்த 20 ஆயிரம் பேரில் கிட்டத்தட்ட 9,800 பேரை இலவசமாக கோயம்பேடு வரை மாநகரப் பேருந்துகளைப் பயன்படுத்தி அழைத்துச் சென்றுள்ளோம்.

இது தவிர ஆட்டோ மற்றும் டாக்சி முன்பதிவு செய்து கொண்டு செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மிகச் சிறப்பாகச் செயல்படுகின்ற இந்த அரசின் மீது ஏதேனும் குறை சொல்கின்ற நோக்கில் தனி நபர்கள் விமர்சிக்கிறார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை என்றார். மேலும், வரும் பிப்ரவரி 7ஆம் தேதி அன்று தொழிற்சங்கத்தினருடன் நடைபெற உள்ள பேச்சு வார்த்தையில் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்" என்றார்.

தொடர்ந்து, நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக வெளிவந்துள்ள தகவல்கள் குறித்த கேள்வி எழுதப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், "திமுக பாரம்பரியமான இயக்கம். அதனை அண்ணா, கருணாநிதி போன்றோர் மாற்றுச் சித்தாந்தமாகத் திராவிட சித்தாந்தத்தின் மூலம் வளர்த்தெடுத்தனர். அவர்களது வழியில் திராவிட மாடல் ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

அதேபோல், எதிர்கால நம்பிக்கையாக உதயநிதி திகழ்கிறார். இந்த நிலையில், இந்தியா முழுவதும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என்ன செயல் திட்டத்தை அறிவிக்கப் போகிறார் என காத்திருக்கிறார்கள். எனவே, திமுகவைப் பொருத்தவரை தொடர்ச்சியாக மக்களுக்காகப் பாடுபடும் இயக்கமாகத் திகழும் எனத் தெரிவித்தார்.

மேலும், நீண்ட தூரப் பேருந்துகள் குறைவாகவும், பழுதடைந்த நிலையிலும் இருக்கிறது என்ற கேள்விக்கு, "கடந்த வாரம் சுமார் 1,666 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு, அதில் முதல் கட்டமாக 100 பேருந்துகளைத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். அதேபோல் தொடர்ந்து இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 4,200 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விஜய்க்கு நான் போட்டி இல்லை..!காக்கா, கழுகு சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.