ETV Bharat / state

கன்னியாகுமரியில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 7:16 AM IST

Poisonous Gas Attack In Kanyakumari
கன்னியாகுமரியில் விஷ வாயு தாக்கி இருவர் பலி

Poisonous Gas Attack: கன்னியாகுமரியில் கிணற்றில் வீசப்பட்ட இருசக்கர வாகனத்தை மீட்க முயன்ற போது, விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி: கொட்டாரம் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீலிங்கம்(55). கூலித் தொழிலாளியான இவருக்கு 19 வயதில் செல்வா என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் இருசக்கர வாகனம் ஓட்டுவது தொடர்பாக, தந்தை மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வா, தனது இருசக்கர வாகனத்தை அப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் தள்ளி விட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து இருசக்கர வாகனத்தை எடுப்பதற்காக அவரது தந்தை ஸ்ரீலிங்கம் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். ஆனால், ஸ்ரீலிங்கம் தண்ணீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அவரை மீட்க அதே பகுதியைச் சேர்ந்த செல்வம்(34) என்பவர் கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். ஆனால் அவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

பின்னர் இச்சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் வந்த தீயணைப்புத்துறையினர், கிணற்றுக்குள் இறங்க முயன்றபோது கிணற்றுக்குள் விஷவாயு பரவி இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து, பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வம் உடல்களைப் பல மணி நேரம் போராடி மீட்டு, கரைக்குக் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறும்போது, "கிணற்றுக்குள் தள்ளி விடப்பட்ட மோட்டார் சைக்கிளிலிருந்து பெட்ரோல் கசிந்து கிணறு முழுவதும் விஷவாயு பரவி இருந்ததால் ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வம் இருவரும் மூச்சுத்திணறிப் பலியாகி இருக்கலாம்" எனத் தெரிவித்தனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார் மற்றும் அஞ்சுகிராமம் போலீசார் இறந்த நபர்களின் உடல்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வம் உடல்கள் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிணற்றுக்குள் விழுந்த இருசக்கர வாகனத்தை மீட்க இறங்கிய தொழிலாளி மற்றும் இளைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிஏஏ மூலம் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி - முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.