ETV Bharat / sports

நோ பால் விவகாரத்தில் கள நடுவர்களுடன் வாக்குவாதம் - விராட் கோலிக்கு 50% அபராதம்! - IPL 2024 Virat Kohli Fine

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 6:00 PM IST

Etv Bharat
Etv Bharat

நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.

கொல்கத்தா : 17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (ஏப்.21) மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 36வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக் கொண்டன.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்கள் குவித்தார். தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான பிலிப் சால்ட் 48 ரன்கள் விளாசினார். தொடர்ந்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.

தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணி கடைசி வரை போராடியும் 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. வில் ஜேக்ஸ் (55 ரன்), ரஜத் படிதார் (52 ரன்), இறுதிக் கட்டத்தில் தினேஷ் கார்த்திக் (25 ரன்), கரன் சர்மா (20 ரன்) ஆகியோர் கை கொடுத்த போதிலும் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது.

குறிப்பாக கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், லாக்கி பெர்குசனின் விக்கெட்டை ரன் அவுட் செய்து கொல்கத்தா அணி த்ரில் வெற்றியை பெற்றது. முன்னதாக தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி 2வது ஓவரில் இரண்டு சிக்சர்களை பறக்க விட்டு பெங்களூரு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

இருப்பினும் அவரது ஆட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை ஹர்சித் ரானா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விராட் கோலி விக்கெட்டை பறிகொடுத்தார். ஸ்லோ புல் டாசாக வந்த பந்தை விராட் கோலி அடிக்க அது ஹர்சித் ரானா கையில் சிக்கிக் கொண்டது. இதை நடுவர்கள் நோ பாலாக அறிவிப்பார்கள் என்று எண்ணிய விராட் கோலிக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.

இதையடுத்து அந்த பந்தை நோ பாலாக அறிவிக்கக் கோரி விராட் கோலி மூன்றாவது நடுவருக்கு அப்பீல் செய்தார். தொடர்ந்து ஹாக் தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்த மூன்றாவது நடுவர்கள் கிரீசை விட்டு விராட் கோலி வெளியே வந்து பந்தை அடித்ததன் காரணமாக கள நடுவரின் அறிவிப்பை மாற்ற மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் அதிருப்தி அடைந்த விராட் கோலி கள நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக சிறிது நேரம் ஆடுகளம் பரபரப்புடன் காணப்பட்டது. இந்நிலையில் விராட் கோலி ஒழுங்கு விதிமுறைகளை மீறியதாக கூறி ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதத்தை அவருக்கு அபராதமாக விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

இதையும் படிங்க : கடைசி வரை போக்கு காட்டிய பெங்களூரு.. 1 ரன்னில் கொல்கத்தா த்ரில் வெற்றி! திக்.. திக்.. கிளைமாக்ஸ்! - IPL2024 KKR Vs RCB Match Highlights

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.