ETV Bharat / sports

ஆட்டம் காட்டிய ஆயுஷ் படோனி.. ஹைதராபாத் அணிக்கு 166 ரன்கள் இலக்கு! - SRH VS LSG

author img

By PTI

Published : May 8, 2024, 9:57 PM IST

SRH VS LSG புகைப்படம்
SRH VS LSG புகைப்படம் (Credit to ANI)

SRH Vs LSG: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

ஹைதராபாத்: 17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் முதல் 4 இடங்களைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் 57வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொண்டு வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி, லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் டிகாக் ஆகியோர் களமிறங்கினர். இதில் டிகாக் 2 ரன்னுக்கும், மார்கஸ் ஸ்டோனிஸ் 3 ரன்னுக்கும் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

இதனை அடுத்து களமிறங்கிய குர்னல் பாண்டியா, கேப்டன் ராகுல் உடன் கைகோர்த்தார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். இதில் 27 ரன்கள் எடுத்து இருந்த ராகுல், பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் நடராஜனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து, 24 ரன்கள் எடுத்திருந்த குர்னல் பாண்டியா ரன் அவுட்டானர். இதனையடுத்து, ஆயுஷ் பதோனி மற்றும் நிக்கோலஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பின்னர், போட்டியின் 15வது ஓவருக்கு பிறகு அடித்து ஆடத் தொடங்கினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். அதிரடியாக ஆடிய ஆயுஷ் பதோனி, 30 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார்.

அதேபோல் மறுமுனையில் நிலைத்து ஆடிய நிக்கோலஸ், 26 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என 46 ரன்கள் குவித்தார். ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர்குமார் 2 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து, 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.

இதையும் படிங்க: சிஎஸ்கே VS ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.