ETV Bharat / opinion

சமூக ஊடகங்கள் வழியாக மக்களை அழைக்கும் திமுக.. தேர்தல் அறிக்கை தயாரிப்பில் நீங்களும் பங்கேற்கலாம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 3:46 PM IST

DMK MP election Manifesto
திமுக தேர்தல் வாக்குறுதி

DMK MP election Manifesto: நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை அனுப்பலாம் என தி.மு.க தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் 2024-க்கான திமுக தேர்தல் அறிக்கை படிவம் வடிவமைப்பதில் புது முயற்சியாக, தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பை பெறும் வகையில், திமுக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைப்பதனால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் பங்களிக்க முடியும் என திமுக தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திமுக தேர்தல் அறிக்கையில் முக்கியமாக இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் தாராளமாக தங்களுடைய கருத்துக்களை திமுக தலைமைக்கு அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்தல்: அதில், "தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, அண்ணா அறிவாலயம் என் 367/369, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600018 என்ற முகவரிக்கு கடிதங்கள் மூலமாகவோ அல்லது dmkmanifesto2024@dmk.in என்ற மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ, பொதுமக்கள் தங்களுடைய பரிந்துரைகளை பகிர்ந்து கொள்ளலாம் என்றும், இதன் மூலம் பொதுமக்களின் தேவைகளை புரிந்து கொள்வதில் திமுக தேர்தல் அறிக்கை குழு மிக ஆர்வமாக உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி எண் மூலம் பகிர்தல்: பொதுமக்கள் நேரடியாக தொலைபேசியில் அழைத்து கருத்துக்களை தெரிவிப்பதற்காக, 08069556900 என்ற ஒரு சிறப்பு ஹாட்லைன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு, திமுக தேர்தல் அறிக்கை குழு பொதுமக்களின் பரிந்துரைகளை அறிந்து கொள்ள தயாராக உள்ளது.

சமூக ஊடகம் மூலம் கருத்துகளை பகிர்தல்: #DMKmanifesto2024- என்ற ஹேஷ்டேக்குடன் (@DMKmanifesto2024) ட்விட்டர் செய்யலாம் அல்லது கருத்துகளை முகநூல் பக்கம் (DMKmanifesto2024) அல்லது வாட்ஸ்அப் எண் - 9043299441 என்ற எண் மூலம் பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை சமூக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் படிவங்கள் மூலம் பரிந்துரைகளை சமர்ப்பித்தல்: QR குறியீட்டை ஸ்கேன் செய்வது மூலம் பொதுமக்கள் தேர்தல் அறிக்கை பரிந்துரைகளை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகள் அல்லது பரிந்துரைகளை திமுகவின் தேர்தல் அறிக்கையாக வடிவமைக்க உதவிகரமாக இருக்கும். மேலும், தமிழகத்தின் பல்வேறு தேவைகள் மற்றும் விருப்பங்கள் தேர்தல் அறிக்கையில் எதிரொலிப்பதை உறுதி செய்யும்.

வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு திமுக அறிக்கை குழு அர்ப்பணிப்புடன் உள்ளது" என திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தேர்தல் அறிக்கை பதிவேடுகளுக்கான காலக்கெடு வருகின்ற 25ஆம் தேதி வரையில் உள்ளதாகவும், அதன் பிறகு ஒரு விரிவான அறிக்கையை மதிப்பீடு செய்து, அதிகாரப்பூர்வமாக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என தி.மு.க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஐஐடி வரலாற்றில் முதல்முறையாக ஸ்போர்ட்ஸ் கோட்டாவை அறிமுகப்படுத்தும் சென்னை ஐஐடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.