ETV Bharat / international

விக்சித் பாரத்: 2047ல் நாட்டின் வளர்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 3:58 PM IST

Empowering india's specially abled: 2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்தில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் தீவிர பங்களிப்பின் மூலம் அடைய முடியும் என கூறியுள்ளார் இந்திய-அமெரிக்கத் தலைவர் பிரணவ் தேசாய்.

விக்சித் பாரத் @2047ல் நாட்டின் வளர்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு
விக்சித் பாரத் @2047ல் நாட்டின் வளர்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு

வாஷிங்டன்: உடல் அளவில் மட்டுமல்லாமல் பொருளாதார அடிப்படையிலும் மாற்றுத்திறனாளிகள் தினமும் பல சவால்களை சந்தித்து வருகின்றனர். தங்களை சுற்றியுள்ள பிற மனிதர்களை போல தாங்களும் யாருடைய உதவியும் இன்றி ஒரு சராசரி வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை மட்டுமே தங்களது பெரிய இலக்காக கொண்டு அதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி நபர்களை, நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க வைக்கும் சிறந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இந்திய-அமெரிக்க தலைவர் மற்றும் வாய்ஸ் ஆப் ஸ்பெஷல்லி ஏபில்டு பீப்பிள் (Voice of Specially Abled People) அமைப்பின் நிறுவனருமான பிரணவ் தேசாய்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 100வது ஆண்டான 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பொருளாதார, சமூக முன்னேற்றம், நல்ல நிர்வாகம் உள்ளிட்ட பல முயற்சிகளை முன்னெடுப்பதே 'விக்சித் பாரத் 2047' நோக்கம். இதனை பிரதமர் மோடி 2023 நவ.15 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த முயற்சியில் முறையான உத்தி, கொள்கை மற்றும் செயல்பாட்டின் மூலம் இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தீவிரமாக பங்களிக்க முடியும் என கூறிய பிரணவ் தேசாய், 2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்தில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் தீவிர பங்களிப்பின் மூலம் பெற முடியும் என கூறியதோடு மட்டும் நிறுத்தாமல் அதற்கான தீவிர முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட ஆளும் பாஜகவின் முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் இந்த திட்டங்கள் குறித்து விளக்கியதாக கூறிய அவர், இந்த துறையில் இந்தியா பெரும் வெற்றியை காணமுடியும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் இந்தியாவின் உயர்மட்ட தலைவர்களிடம் நடத்திய இந்த பேச்சுவார்த்தைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டம் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான அவரது சந்திப்பில், மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கான ஒரு விரிவான வரி ஊக்கத்தொகைத் தொகுப்பை அவர் வழங்கியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளது போல் பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலமாகவும், மாற்றுத்திறனாளிகளை நேரடியாக அல்லது மறைமுகமாக பணியமர்த்துவதன் மூலமாகவும் 2047 ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் இலக்கை மாற்றுத்திறனாளிகள் அடைய முடியும் என கூறியுள்ளார்.

பாஜக தேசிய தலைவர் நட்டாவுடனான சந்திப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான விஷன் 2047ஐ வழங்கிய அவர், மாற்றுத்திறனாளிகள் துறையை நலன் சார்ந்த கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கும் பாரம்பரிய கண்ணோட்டத்திற்கு பதிலாக, அவர்களது பொருளாதார மேம்பாடு குறித்த முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார். இதற்கு, மாற்றுத்திறனாளிகளின் திறன் குறித்த விழிப்புணர்வை அவர்களிடம் ஊக்குவிக்குமாறு நட்டா கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியுடனான சந்திப்பில், மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் போக்குவரத்து மற்றும் பயன்பாட்டு சிக்கல்களை முன்வைத்த அவர், போக்குவரத்தின் போது யாருடைய உதவியும் இன்றி மாற்றுத்திறனாளிகள் அவர்களது சொந்த பங்களிப்பை உறுதி செய்வதோடு, இயக்கத்தை மேம்படுத்துவதற்கான இலக்காகவும் அவர் உருவாக்கியுள்ள திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் இருக்கும் என கூறியுள்ளார். மேலும் அமைச்சகத்தால் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் பணியமர்த்தப்பட வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து பல்வேறு வணிக பிரிவுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் குறித்து அதானி ஃபவுண்டேஷன்ஸின் தலைவர் பிரித்தி அதானியை சந்தித்ததாக கூறிய தேசாய், இந்த சந்திப்பை தொடர்ந்து அதானி ஃபவுண்டேஷன்ஸின் பலம் மற்றும் வளங்களைப் பயன்படுத்தி மாற்றுத்திரனாளிகள் பிரிவில் இருந்து 10,000 பேர் வரை சோலார் நிறுவுதல் போன்ற துறைகளில் பணியமர்த்தப்படுவதை நோக்கமாகக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அவர்கள் உருவாக்கி வருவதாக கூறியுள்ளார்.

குஜராத் முதல்வருடனான அவரது கலந்துரையாடலில், 2047 ஆம் ஆண்டுக்குள் விக்சித் பாரத்தில் மாற்றுத்திறனாளிகள் துறையின் பொருளாதார இலக்கான 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை அவர்களது பங்களிப்புடன் அடைய, அவர்களை மேம்படுத்தி அவர்களின் திறனைப் பயன்படுத்துவதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய பயனுள்ள குஜராத்தை உருவாக் முடியும் என விளக்கியுள்ளார்.

மாற்றுத்திறனாளி மக்களை ஊக்குவித்து, அவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்புகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தேசாயின் இந்த திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கான அவர்களது பங்களிப்பாக மட்டும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கையையும் திசைமாற்றிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க: அமெரிக்காவாழ் வெளிநாட்டவர்கள் விசாவை புதுப்பிக்க இனி அலைய வேண்டியதில்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.