இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நாளை (நவ. 8) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பசின் மாவட்டத்தில் உள்ள சுயேட்சை வேட்பாளர் தொடர்புடைய இடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் 14 பேர் வரை கொல்லப்பட்டதாக மாகாண செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.
மேலும், இந்த வெடிகுண்டு தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குயில்லா சபியுல்லா டவுன் பகுதியில் இருக்கும் பஸ்லுர் ரெஹ்மான் என்ற அரசியல்வாதியின் ஜமியத் உலெமா இஸ்லாம் கட்சி அலுவலகத்திலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இந்த கோர தாக்குதலில் 10 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை எந்த அமைப்பும் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் நாளை (பிப். 8) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திடீர் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தில் இயங்கி கிளர்ச்சிக் குழு, பாகிஸ்தான் மற்றும் ஈரான் எல்லை பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலும், அந்த கிளர்ச்சிக் குழுவின் சதித் திட்டமாக இருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தாக்குதல்கள் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக சம்மன் - நீதிமன்றம் உத்தரவு! என்ன காரணம்?