ETV Bharat / international

ஈஸ்டருக்கு புனித யாத்திரை சென்ற 45 பேர் உயிரிழப்பு…தென் ஆப்பிரிக்காவில் கோர விபத்து! - 45 killed in bus accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 29, 2024, 2:22 PM IST

Updated : Mar 29, 2024, 5:45 PM IST

south africa bus accident
south africa bus accident

south africa bus accident: தென் ஆப்பிரிக்காவில் ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது, எதிர்பாரத விதமாக பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா: ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, தென் ஆப்பிரிக்காவின் மோரியா நகரில் உள்ள சியோனிச கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்று வரும் ஈஸ்டர் ஆராதனையில் கலந்துகொள்ள, தென் ஆப்பிரிக்காவில் உள்ள பல்வேறு பகுதியில் இருக்கும் கிறிஸ்துவ மக்கள் வருகை தருவார்கள்.

அப்படி, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்திற்காக பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று மாமட்லகலா பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா பகுதியில் இருந்து மோரியாவில உள்ள லிம்போபோவில் நடைபெறும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட நேற்று, பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது.

அப்போது, பேருந்து மாமட்லகலா பகுதியில் உள்ள பாலத்தை கடக்கும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 165 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து முற்றிலுமாக எறிந்து சேதமான நிலையில், பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதிர்ஷ்டவசமாக 8 வயது குழந்தை மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு லிம்போபோ பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பலரது உடல்கள் பேருந்தின் அடிப்பகுதியில் சிக்கி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அப்பகுதியில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், லிம்போபோவில் நடைபெற்று வரும் சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் பங்கேற்ற போக்குவரத்து அமைச்சர் சிண்டிசிவே சிக்குங்கா, சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார் என தேசிய போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஈஸ்டர் விடுமுறையின் போது நடந்த சாலை விபத்துகளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், ஈஸ்டர் பண்டிகையின் போது போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதாலும், அதிக மக்கள் பயணிப்பதாலும், சாலை விபத்துக்களை தடுக்க தென் ஆப்பிரிக்கா அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

கரோனோ காலத்திற்கு பின்னர், முதல் முறையாக மோரியா நகரில் உள்ள சியோனிச கிறிஸ்தவ தேவாலயத்தில் ஈஸ்டர் கொண்டாட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமெரிக்கா பாலம் விபத்து - 2 பேரின் சடலங்கள் மீட்பு! 6 பேர் நிலை என்ன? மீட்பு பணி தீவிரம்! - Baltimore Bridge Collapse

Last Updated :Mar 29, 2024, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.