உடற்பயிற்சியில் ஆர்வமில்லையா? ரத்தசோகை இருக்கலாம்! எச்சரிக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 8:06 PM IST

பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம்

Anemia: தமிழகத்தில் 56 சதவீதம் இளம்பெண்களும், 41 சதவீதம் இளைஞர்களும் ரத்தசோகை நோயுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதனை தடுப்பதற்காக பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம்

சென்னை: பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் சார்பில் தமிழ்நாட்டில் நோய் பரவல் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அதனை மருத்துவ இதழ்களில் வெளியிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள இளம் பருவத்தினருக்கு இரத்த சோகை நோய் தொற்று பாதிப்பு குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டு, அதனையும் வெளியிட்டுள்ளனர். உலகளாவிய பொது சுகாதாரத்துறையின் கவலையாக இரத்த சோகை நோய் இருக்கிறது.

வளரிளம் பருவத்தினரிடையே இரத்த சோகை பாதிப்பு: குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில், இளம் பருவத்தினரின் நல்வாழ்வையும் வளர்ச்சியையும் பாதிக்கிறது. இந்த ஆய்வு இரத்த சோகையின் பரவல் மற்றும் தீவிரத்தை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள இளம் பருவத்தினரிடையே இரத்த சோகையின் பாதிப்புகளை கண்டறிந்து சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.

41% இளைஞர்களும் இரத்த சோகை: நாடு, மக்கள்தொகை மற்றும் சமூக-பொருளாதார மாறுபாடுகளில் இரத்த சோகை பரவலை ஆய்வு செய்து, பரிந்துரைகளை வழங்க ஆய்வு செய்யப்பட்டன. ரத்த சோகை கண்டறியும் முகாம்கள், 2 ஆயிரத்து 127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் (Primary Health Centre) மற்றும் பள்ளிகள், கல்லூரிகளில் இருந்து தரவுகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில், தமிழகத்தில் 56 சதவீதம் இளம்பெண்களும், 41 சதவீதம் இளைஞர்களும் இரத்த சோகை நோயுடன் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இரத்த சோகை பாதிப்பு: கடுமையான இரத்த சோகையால் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் நிலைமைகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் இளம் பருவத்தினரிடையே இரத்த சோகை நோயின் பாதிப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், கரூர், இராமநாதபுரம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இரத்த சோகை நோய் பாதிப்பு அதிகளவில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோய் பாதிப்பை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர். இரத்த சோகை நோய் குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “தமிழ்நாட்டில் ரத்த சோகை நோயை கட்டுப்படுத்துவதற்கு வளரிளம் பருவத்தினரை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

இரத்த சோகை கண்டறியும் முகாம்: 10 வயது முதல் 19 வயதுடைய வளரிளம் பருவத்தினர் ஆரோக்கியமாக இருந்தார்கள் என்றால், அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக இருக்கும். அதனால் அவர்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளும் ஆரோக்கியமாக உடல் திடகாத்திரத்துடன் இருக்கும். எனவே வளரிளம் பருவத்தினருக்கு இரத்த சோகை கண்டறியும் செயல்களில் ஈடுப்பட்டு கவனம் செலுத்தி வருகிறோம். அதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

57% பெண் குழந்தைகளுக்கு இரத்த சோகை: இதுவரை 8.7 லட்சம் பெண் குழந்தைகளுக்கும், 6.83 லட்சம் ஆண் குழந்தைகளுக்கும் இரத்த சோகை பாதிப்பு இருக்கிறதா என பரிசோதனை செய்ததில் 57 சதவீதம் பெண் குழந்தைகளுக்கும், 43 சதவீதம் ஆண் குழந்தைகளுக்கும் இரத்த சோகை பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பாதிப்பு நடவடிக்கைகள்: அவர்களில் 2 சதவீதம் அதாவது 11 ஆயிரத்து 253 பெண் குழந்தைகளுக்கு இரத்த சோகை பாதிப்பு அதிகளவில் உள்ளதால், அவர்களை தொடர்ந்து கண்காணித்து மருந்து மாத்திரைகள், ஊசி, தேவைப்பட்டால் ரத்தம் செலுத்துதல் போன்றவை அளிக்கப்படுகிறது. அதே போல் ஒரு சதவிகித ஆண்களுக்கு தீவிரமான ரத்தசோகை பாதிப்பு இருக்கிறது. அதனையும் சரி செய்யும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

இரத்த சோகை வராமல் பாதுகாப்பதற்காக சுகாதாரக்கல்வியும், வாரத்தில் ஒரு நாள் அயன் போலிக் அமில மாத்திரை வழங்கப்படுகிறது. நடமாடும் மருத்துவக் குழுவினால் இது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. தேவைப்படும் போது ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ICDS - Integrated Child Development Services) திட்டத்தோடும் இணைந்து செயல்படுகிறோம்.

கர்ப்பிணிகளுக்கு இரத்த சோகை: கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துக் கொடுப்பது, போதுமான அளவுக்கு எடை இல்லாத குழந்தைகள் அல்லது போதுமான அளவுக்கு வளர்ச்சி இல்லாத குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு ஊட்டச்சத்து மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. கர்ப்ப காலத்தில் இரத்த சோகை நோய் இருப்பவர்களுக்கு கூடுதலாக இரத்த சோகை வரக்கூடாது என்பதற்காக ஊட்டச்சத்து மருந்து வழங்கப்படுகிறது.

சில தாய்மார்களுக்கு அதிக அளவு பாதிப்பு இருக்கும் போது அயன் சுக்ரோஸ் ஊசி கொடுத்து கட்டுப்படுத்துகிறோம். சிறப்பு திட்டமாக 23 சுகாதார ஒன்றியங்களில் கர்ப்ப காலத்திற்கான குறியீடுகள் குறைவாக இருப்பதால், அதில் தனி கவனம் செலுத்தி 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் அளிக்கப்படுகிறது.

கர்ப்ப காலத்துல் தாய்மார்கள் சரியான உடல் எடையை பராமரிப்பதற்கும், ஹீமோகுளோபின் அளவை சமன் செய்வதற்கும் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையால் கண்டிப்பாக வரும் காலங்களில் கர்ப்ப காலத்தில் இரத்த சோகை நோய் கண்டிப்பாக கட்டுப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. கர்ப்பிணிகள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், குழந்தைக்கு வளர்ச்சி குறைவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

அதனால் தான் இத்தகு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தாய்மார்களுக்கு பிரசவத்தின் போது பொதுவாகவே இரத்தப்போக்கு இருக்கும். அதிலும் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் பாதிப்பு இருக்கும். அதனை தடுப்பதற்கு இரத்த சோகை நோய் கட்டுப்படுத்த வேண்டும்.

இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்: இரத்த சோகை நோய் பாதிப்பால் உடல் நலம், மன நலம் இரண்டுமே பாதிக்கப்படும். இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலளவில் சீக்கிரமாகவே சோர்வு அடைவர், செயல்களில் போதிய ஈடுபாடு இல்லாமல் இருப்பர், மேலும் உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள். எப்போதும் சோர்வாகவே காணப்படுவார். சிலருக்கு உடல் எடை குறியீட்டு எண்(BMI - Body Mass Index) கூடுதலாக இருக்கும்.

கல்வியிலும் பின்தங்கிய நிலை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. எனவே கண்டிப்பாக இரத்த சோகை நோய் கட்டுப்படுத்துவது, அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கும் அவசியமாகும். இரத்த சோகை நோய் தொற்று வராமல் தடுப்பதற்கு உள்ளூரில் கிடைக்கக்கூடிய இரும்பு சத்து அதிகமுள்ள கீரைகள், காய்கறிகள், பழங்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்த வரையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

மரபியல் ரீதியான பாதிப்பு: பரிசோதனை செய்து பாதிப்பு அதிகமாக இருந்தால், அதற்கான காரணத்தை கண்டறிந்து மருந்து மாத்திரைகளை கொடுக்கலாம். சிக்கிள் செல் அனீமியா, ஹீமோகுளோபியா போன்ற பாதிப்பு இருப்பவர்களுக்கு மட்டும் தான் மரபியல் ரீதியாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிக்கிள் செல் அனீமியா கட்டுப்படுத்துவதற்கு தனித்திட்டம் இருக்கிறது. பொதுமக்களும் வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிகளுக்கும் தனி பரிசோதனை உள்ளது.

பரிசோதனையில் மரபணு பாதிப்பு இருந்தால் அதற்கான சிகிச்சை தனியாக கொடுக்கப்படுகிறது. சிக்கிள் செல் அனீமியா குறிப்பாக மலைவாழ் பகுதிகளில் இருக்கிறது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரத்த சோகை நோய் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு அரசின் திட்டங்களை பொதுமக்களும் பயன்படுத்த வேண்டும். இரத்த சோகை என்பது ஒருநாளில் சரி செய்ய கூடியது அல்ல.

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் கடைப்பிடிக்க வேண்டும். போதுமான அளவுக்கு கீரை, பழம் , காய்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். வைட்டமின், அயன் மாத்திரைகள் கொடுக்கும் போது சாப்பிட வேண்டும். இதனால் ஒரு ஆரோக்கியமான எதிர்காலத்தை நம்மால் உருவாக்க முடியும். கர்ப்ப காலத்தில் முதலில் ரத்தம் இருக்கிறதா என்பதை முதலில் பரிசோதனை செய்வோம். அதற்கான சிகிச்சை அளிக்கும் போது, கர்ப்ப காலத்தில் பாதுகாப்பாக குழந்தையை பெற்று எடுக்க முடியும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மூளை பக்கவாதம் இளைஞர்களை அதிகளவில் தாக்குகிறது.. AIIMS ஆய்வில் பகீர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.