ETV Bharat / entertainment

ராகவா லாரன்ஸின் அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டார்... லோகேஷ் கனகராஜ் - Benz Tamil Movie

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 14, 2024, 7:28 PM IST

Raghava Lawrence Benz Movie: நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படமான 'பென்ஸ்' படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதை எழுதி, தயாரிக்க உள்ளார்.

Raghava lawrence upcoming movie update
Raghava lawrence upcoming movie update

சென்னை: மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன் பின்னர் கார்த்தி, விஜய், கமல்ஹாசன் என முன்னணி திரையுலக நட்சத்திரங்களை வைத்து படங்களை இயக்கி, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

இதனிடையே, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' (G Squad) எனும் தயாரிப்பு நிறுவனம் துவங்கி, தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். முன்னதாக, 'உறியடி' விஜய் குமார் நடிப்பில் வெளியான 'ஃபைட் கிளப்' (Fight Club) படத்தைத் தயாரித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' (Benz) படத்தை ஃபேஷன் ஸ்டூடியோஸ் (Passion Studious) நிறுவனத்துடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் தயாரிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்குக் கதையும் எழுதியுள்ளார். இந்த படத்தை ரெமோ, சுல்தான் ஆகிய படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்க உள்ளார்.

முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ்-ன் நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அவரது அடுத்த படமான பென்ஸ் படத்தின் அறிவிப்பு வெளியானது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' படம் பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இருப்பினும் நல்ல வசூலை ஈட்டியது. இவரது படங்கள் குறித்து எதிர்மறையான பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதை ரசிகர்களைக் கவர்ந்து விடுகிறது.

தற்போது லோகேஷ் கனகராஜ் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதில், படத்தின் பெயர் மற்றும் டீஸர் இம்மாதம் 22ஆம் தேதி வெளியாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே, அண்மையில் கமல்ஹாசன் எழுதி, ஸ்ருதிஹாசன் இசையமைத்த 'இனிமேல்' எனும் ஆல்பம் பாடலில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாகவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார். ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் உருவான அந்த ஆல்பம் பாடலில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் காதல் ஜோடியாக நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையும் படிங்க: பாலாவின் 'வணங்கான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.