ETV Bharat / entertainment

"தந்தை - மகள் இடையேயான உணர்வு பற்றிய படம்தான் சைரன்" - நடிகர் ஜெயம் ரவி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 11:54 AM IST

jayam_ravi
ஜெயம் ரவி

Siren Movie: அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள சைரன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், அறிமுக இயக்குநர் வளர்ச்சிக்கு நான் ஒரு கருவியாகத்தான் இருக்கிறேன் எனவும், தந்தை - மகள் இடையேயான உணர்வு பற்றிய படம்தான் சைரன் எனவும் நடிகர் ஜெயம் ரவி கூறினார்.

சைரன் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெயம் ரவி பேச்சு

சென்னை: அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபாமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகிபாபு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சைரன். இந்த திரைப்படம் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் செய்தியாளர் சந்திப்பு, சென்னை பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் நேற்று (பிப்.8) நடைபெற்றது.

இதில் நடிகர் ஜெயம் ரவி, சமுத்திரக்கனி, அழகம் பெருமாள், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ், எடிட்டர் ரூபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், நடிகர் ஜெயம் ரவி மேடையில் பேசுகையில், “முதலில் இந்த படம் ஆரம்பித்தது படத்தொகுப்பாளர் ரூபனிடம் இருந்துதான்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் சுஜாதா, இந்த கதையை விடவில்லை. நான்தான் இந்த படம் தயாரிப்பேன் என்றார். படத்திற்கு முதல் நம்பிக்கையே தயாரிப்பாளர்தான். நிமிர்ந்து நில் திரைப்படத்தில் அருமையான பின்னணி இசையை ஜி.வி.பிரகாஷ் கொடுத்திருந்தார்.

அதனால் ஜி.வி.பிரகாஷ்தான் இந்த படத்திற்கு இசை அமைக்க வேண்டும் என்று படக்குழு ஆசைப்பட்டது. அதன்படி, ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்தான். அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த படத்திற்கு ஒரு உறுதியான கதாபாத்திரம் தேவைப்பட்டது. அதற்கு கீர்த்தி சுரேஷ் சரியாக பொருந்தி இருந்தார். கீர்த்தி சுரேஷ் ஒரு கடுமையான உழைப்பாளி, அதுதான் அவரை இவ்வளவு பெரிய இடத்தில் வைத்து இருக்கிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அழகம் பெருமாள் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் வளர்ச்சிக்கு நான் ஒரு கருவியாகத்தான் இருக்கிறேன். இன்னும் சிறந்த மேடைகளில் இயக்குநர் ஆண்டனி பாக்யராஜை காண்பீர்கள்.

ஆண்டனி பாக்யராஜ் உழைப்பு இல்லாமல் இந்த படம் இல்லை. இந்த படத்தில் நான் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறேன். இந்த படம் எனக்கு புது அனுபவம். இந்த படம் உணர்ச்சிப்பூர்வமான (emotions) படம். குடும்பங்களுக்கான படம். தந்தை - மகள் இடையேயான உணர்வு பற்றிய படம்தான் சைரன். இந்த படம் வருகிற பிப்.16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது" என்று கூறினார்.

இதையும் படிங்க: கோவை - அயோத்தி ஆஸ்தா சிறப்பு ரயில் சேவை துவக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.