ETV Bharat / entertainment

கர்நாடக இசை அனைத்துச் சமுதாயத்தினருக்கும் சமமானது, எந்தவித வேறுபாடும் கிடையாது - கிராமி விருது வென்ற செல்வகணேஷ்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 7:26 PM IST

Grammy award winner Selva ganesh: கர்நாடக இசை குறிப்பிட்ட சமுதாயத்திற்கானதா என்ற கேள்விக்கு, அப்படி இல்லை சுனாமி சமயத்தில் எனது தம்பி மீனவர்களுக்கு இசை சொல்லிக் கொடுத்தார், இசைக்கு மட்டும் எந்த வித வேறுபாடும் கிடையாது என இசைக்கலைஞர் செல்வகணேஷ் கூறியுள்ளார்.

கர்நாடக இசை அனைத்து சமுதாயத்தினருக்கும் சமமானது, எந்தவித வேறுபாடும் கிடையாது
கர்நாடக இசை அனைத்து சமுதாயத்தினருக்கும் சமமானது, எந்தவித வேறுபாடும் கிடையாது

கிராமி விருது வென்ற செல்வகணேஷ்

சென்னை: இசைத்துறையில் மிக முக்கிய விருதாகப் பார்க்கப்படும் கிராமி விருது இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவிற்குக் கிடைத்துள்ளது. பாடகர் ஷங்கர் மகாதேவன், கிதார் கலைஞர் ஜான் மெக்லாலின், தபேலா கலைஞர் சாஹிர் உசைன், தாள கலைஞர் (percussionist) செல்வகணேஷ் மற்றும் வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் ஆகியோர் அடங்கிய சக்தி இசைக்குழு, "திஸ் மொமண்ட்" (This Moment) என்ற 8 பாடல்கள் அடங்கிய ஆல்பம் ஒன்றை உருவாக்கியிருந்தனர்.

இந்நிலையில், சக்தி இசைக்குழுவின் இந்த ஆல்பத்திற்கு உலக அளவில் சிறந்த மியூசிக் ஆல்பத்திற்கான (Best Global Music Album) பிரிவில் இசைத்துறையின் உயரிய விருதான கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்குப் பல தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அறக்கட்டளை ஒன்றுக்கு நிதி திரட்டுவதற்காக செல்வகணேஷ் குழுவினர் இசைக் கச்சேரி ஒன்றை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து கிராமி விருது பெற்ற இசைக் கலைஞர் செல்வகணேஷ் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில், “சக்தி இசைக் குழுவின் 50ஆவது ஆண்டு காலப் பயணத்திற்குக் கிடைத்த விருது. இந்த இசைக் குழுவின் 'திஸ் மொமண்ட்' ஆல்பம் பாடலுக்காக கிராமி விருது பெற்றுள்ளது. இது எனக்கு மட்டும் சொந்தமல்ல சக்தி உறுப்பினர்களுக்கானது. எல்.சங்கர் உள்ளிட்ட மூத்த இசைக் கலைஞர்களின் முதலீடு தான் சக்தி இசைக் குழு. நாங்கள் அதன் ‌பயனை அனுபவித்து வருகிறோம்.

உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த ஆல்பத்தை பாடினோம். எனது அப்பா ஏற்கனவே கிராமி விருது வாங்கியுள்ளார். தற்போது நானும் வாங்கியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. எதுவும் எதிர்பார்க்காமல் 100 சதவீதம் உழைப்பு கொடுத்தால் அது உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கும் என்பதை நான் நேரடியாகப் பார்த்தேன். கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் விருது கிடைத்தது விவரிக்க முடியாத ஆனந்தத்தைக் கொடுத்துள்ளது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு கர்நாடக இசை மீது ஆர்வம் அதிகமாக உள்ளது.

இன்னும் ஆர்வம் வரும் என்பதை நான் கண் கூடாகப் பார்க்கிறேன் என்றார். மேலும் வெண்ணிலா கபடிக் குழு படத்திற்கு இசை அமைத்தது பற்றிக் கேட்டதற்கு, படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிறது. அந்தப் படத்திற்கு இசை அமைத்தது மிகப் பெரிய அனுபவம். எனக்கும் இசையமைக்க வரும் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

இப்படம் எப்போதும் எனது இதயத்தில் இருக்கும். சுசீந்திரன் மிகப் பெரிய இயக்குநர், சூரி எனக்குப் பிடித்த நண்பர், தற்போது மிகப் பெரிய நடிகராக இருக்கிறார். விஷ்ணு விஷால் ரஜினி படம் வரை நடித்துவிட்டார். நானும் கிராமி விருது வாங்கி வந்து நிற்கிறேன், மிகப் பெருமையாக இருக்கிறது.

கிராமி விருது பெற்ற பிறகு நாங்கள் முதல் பக்திப் பாடல் ஆல்பம் இன்று வெளியிட்டுள்ளோம். எனது தாத்தா காலத்திலிருந்து இசைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட இடங்களிலும் இசைப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

திருமண நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் பயன்பாடு குறைந்து வருவது குறித்த கேள்விக்கு, உலக அளவில் தென்னிந்திய இசைக்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது, இங்கேயும் இருக்கிறது. நாதஸ்வரம் வாசித்துக்கொண்டு தான் வருகிறார்கள். இசைக் கலைஞர்களுக்குப் பத்ம விபூஷண் விருது கிடைப்பதே ஒரு அங்கீகாரம் தான்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தந்தை இறந்த நிலையில் கருணை வேலை கோரிய திருமணமான பெண் - பெற்றோரின் பங்களிப்புகளை வேதனையுடன் தெரிவித்த நீதிபதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.