ETV Bharat / entertainment

நடிகை த்ரிஷா விவகாரம்: உச்ச நடிகர்களை சாடிய இயக்குநர் லெனின் பாரதி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2024, 5:24 PM IST

Etv Bharat
Etv Bharat

Actress Trisha Issue: பெண்கள் பற்றிய படங்கள் நிறைய வந்தாலும் அது அவர்களின் அசல் பிரச்சினையை பேசும் படமாக இல்லை. சில படங்கள் அவர்களையும் ஆணாதிக்க சிந்தனை உடைய சூப்பர் ஹீரோ படங்களாகத்தான் வருகிறது என இயக்குநர் லெனின் பாரதி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லெனின் பாரதி

சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருக்கும் எல்லோரும் தன்னுடைய ஆரம்ப காலக்கட்டத்தில் பெண் உடலை மையமாக வைத்து தான் பயணப்பட்டு வந்தார்கள். ஆணாதிக்கம் நிறைந்த இடத்தில் இருக்கக்கூடிய கதாநாயகர்கள் பெண்களுக்கு ஆதரவா குரல் கொடுக்க மாட்டார்கள் என இயக்குநர் லெனின் பாரதி உச்ச நடிகர்களை சாடியுள்ளார்.

இயக்குநர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் கயல் ஆனந்தி நடித்துள்ள படம் மங்கை. இன்று நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆனந்தி, ஷிவின், சாக்ஷி, ரிஷி, படத்தின் இயக்குநர் குபேந்திரன் காமாட்சி, இசையமைப்பாளர் தீசன், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, தயாரிப்பாளர் ஜாஃபர், கிடா பட இயக்குநர் ரா. வெங்கட், இயக்குநர் லெனின் பாரதி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய இயக்குநர் லெனின் பாரதி, “மங்கை என்ற படத்தின் தலைப்பே மிகவும் ஆழமானது. அதிலும் அரசியல் உள்ளது. அந்த தலைப்பை கவனித்தால் அதில் பல கீறல்கள் சிராய்ப்புகள் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். இது, தொடர்ந்து பெண்கள் இந்த சமுதாயத்தில் படும் அவலங்களை பற்றியும், தினம் தினம் அவர்களின் போராட்டங்கள் பற்றியும் பேசுகிறது.

ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில் குறிப்பாக ஆண் கதாபாத்திரங்களை மையப்படுத்திய டைட்டில்கள் மிகவும் கம்பீரமாக வரும். கேட்டால் நாங்கள் ஆண்ட பரம்பரை அப்படி இப்படினு பேசுவாங்க. முன்பெல்லாம் பெண்களின் உடலை மையமாக வைத்து தான் படத்தின் விளம்பரங்கள் பெரியதாக இருக்கும். அதில் நடிக்கக்கூடிய நடிகர்களின் உருவம் சிறியதாக இருக்கும். பெண்களின் உடல் வியாபாரமாகத் தான் பார்க்கப்பட்டு வந்தது” என்றார்.

நடிகை திரிஷா விவகாரம் குறித்து பேசிய அவர், தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரமாக இருக்கட்டும், தற்போது நாட்டை ஆளுகின்ற நாட்டை ஆள துடிக்கின்ற நடிகராக இருக்கட்டும். இவர்கள் எல்லோரும் தன்னுடைய ஆரம்ப காலக்கட்டத்தில் பெண் உடலை மையமாக வைத்து தான் பயணப்பட்டு வந்தார்கள். ஆணாதிக்கம் நிறைந்த இடத்தில் இருக்கக்கூடிய கதாநாயகர்கள் பெண்களுக்கு ஆதரவா குரல் கொடுக்க மாட்டார்கள்.

அப்படி ஒருவேளை குரல் கொடுத்தார்கள் என்றால் அதற்கு பின்னால் அவர்களின் சுயநலம் தான் இருக்கும். இவர்கள் ஒரு போதும் பெண் விடுதலைக்காக பேசமாட்டார்கள்” என்று கூறினார். இதனைத் தொடர்ந்து ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், “மங்கை திரைப்படம் தொடர்ந்து பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை, அடக்குமுறை பற்றி விரிவாக பேசும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

பெண்கள் பற்றிய படங்கள் நிறைய வந்தாலும் அது அவர்களின் அசல் பிரச்சினையை பேசும் படமாக இல்லை. சில படங்கள் அவர்களையும் ஆணாதிக்க சிந்தனை உடைய சூப்பர் ஹீரோ படங்களாகத்தான் வருகிறது. பாலின சமத்துவத்தை பற்றி பேசினாலே நல்ல படங்கள் வரும்.

குடும்ப அமைப்பு சமூக அமைப்பு மதங்கள் மூலமாக பெண்களை அடக்குவதும் ஒடுக்குவதுமான சமூக அமைப்பாகத்தான் இருக்கிறது. பெரிய கதாநாயகர்கள் தங்களின் படங்களில் பெண்ணை உடலாக போதிக்கிற படங்களில் நடித்து வந்ததால், அவர்கள் இது குறித்து கண்டிப்பாக பேச மாட்டார்கள்” என்றார்.

இதையும் படிங்க: நடிகை திரிஷா குறித்து அவதூறு - நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம்! ஆடியோ வெளியிட்டு எதிர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.