ETV Bharat / bharat

ஆந்திர பிரதேசத்திற்கு மே.13ல் தேர்தல்! பாஜக- தெலுங்கு தேசம்- ஜனசேனா கூட்டணி! ஜெகன் மோகனின் திட்டம் என்ன? - Lok sabha Election

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 6:38 PM IST

Updated : Apr 3, 2024, 3:34 PM IST

Etv Bharat
Etv Bharat

Andra Pradesh Assembly Election: ஆந்திர பிரதேச சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக மே 13ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 2024 மக்களவை மற்றும் 4 மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் தேதியை அறிவித்தார். அதன்படி, 175 தொகுதிகளை கொண்ட ஆந்திர பிரதேச சட்டப் பேரவைக்கு மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜூன் மாதத்துடன் ஆந்திர சட்டப்பேரவை காலாவதியாக உள்ள நிலையில், மக்களவையுடன் சேர்த்து மாநில சட்டப் பேரவைக்கும் இந்த முறை தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திர பிரதேசத்தில் இரு முனை போட்டி நிலவுகிறது. ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா ஆகிய மூன்று கூட்டணிகளை எதிர்த்து களம் காணுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. அந்த தேர்தலில் தெலுங்கு தேசம் வெறும் 23 இடங்களை மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலம் ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட உடன் நடத்தப்பட்ட சட்டப் பேரவை தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம் கூட்டணி நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஆதரவுடன் 103 இடங்களை கைப்பற்றி இருந்தது. இந்த முறை கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா இடையே கூட்டணி உறுதியான நிலையில், அண்மையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா தனித்தனியாக போட்டியிட்ட நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எளிதில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இந்த முறை மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக களம் கண்டு உள்ளதால் ஆந்திராவில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை புலிவெந்துலா தொகுதியில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி களம் காண உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த தொகுதியில் ஜெகன் மோகன் ரெட்டி குடும்பம் பலம் வாய்ந்ததாக காணப்படும் நிலையில், அவருக்கு போட்டியாக தெலுங்கு தேசம் கட்சியில் எம்.ரவீந்திரநாத் ரெட்டி களமிறக்கப்பட உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அதேபோல் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் மீண்டும் மங்களகிரி தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த முறையும் நாரா லோகேஷ் அதே மங்களகிரி தொகுதியில் போட்டியிட்ட நிலையில், அவரை ஜெகன் மோகன் கட்சி வேட்பாளர் வீழ்த்தினார். இந்த முறை நாரா லோகேஷ் போட்டியிட திட்டமிட்டால் வேற வேட்பாளரை களமிறக்க ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : அருணாசல பிரதேசம், சிக்கிமில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல்!

Last Updated :Apr 3, 2024, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.