ETV Bharat / bharat

அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

author img

By PTI

Published : Feb 26, 2024, 6:50 PM IST

BJP state president Annamalai
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

BJP state president Annamalai: மத ரீதியாக அவதூறு கருத்துப் பதிவு செய்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீதான வழக்கை விசாரணை செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் என்பவர் சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கிறிஸ்துவ மதத்திற்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இரு மதத்திற்கும் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் வகையில் அவருடைய கருத்து உள்ளது. அதனால், அந்தக் கருத்தை நீக்கி அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம், வழக்கு விசாரணைக்காக அண்ணாமலை நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது. இதனையடுத்து, இந்தச் சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் ஆஜராக விலக்குத் தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கடந்த பிப்.8ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அண்ணாமலையின் முறையீடு மனுவை ரத்து செய்து வழக்கை சேலம் கீழமை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடினார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அண்ணாமலை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீடு மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் ஆகியோர் முன்னிலையில் இன்று (பிப்.26) விசாரணைக்கு வந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் முழு விபரம்: முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனியார் யூடியுப் சேனலின் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றுள்ளார். அதில், "தீபாவளி பண்டிகைக்குப் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று தற்போது தான் தடைகள் கொண்டு வரப்படுகின்றன. இது இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் இந்தத் தடை விதிக்க கிறிஸ்துவ மிஷனரிகளின் துணையுடனே நடைபெற்றது" என்று அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு முதலில் சேலம் மாவட்ட நீதிமன்றம் நேரில் ஆஜராக வேண்டும் என்ற சம்மனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்கிறார். இந்த மனு நீதிபதி அனந்த வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. அப்போது அண்ணாமலை சார்பில் அவர் மீதான வழக்கு விசாரணை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்படுகிறது. இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கைத் தள்ளுபடி செய்து சேலம் கீழமை நீதிமன்றத்திற்கு விசாரிக்க உத்தரவிடுகிறார்.

இந்த முறையீடு மனு மீதான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அண்ணாமலை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்கிறார். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது அண்ணாமலை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லுத்ரா மற்றும் சாய் தீபக், அண்ணாமலை பேசிய நேர்காணல் பதிவை முன்வைத்து, இது வேண்டுமென்றே தவறாகச் சித்தரிக்கப்படுவதாகவும், மேலும் இது ஓராண்டுக்கு முன் பதிவு செய்யப்பட்ட நேர்காணல் என்றும் அதனால் பொது அமைதிக்கு எந்தப் பங்கமும் விளைவிக்கவில்லை என்பதனால் இதனை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். முன்னதாக மொத்தம் 44.25நிமிடங்கள் நடைபெற்ற அந்த நேர்காணல் பதிவில், கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி இந்த நேர்காணல் உள்ள 6.30 நிமிடங்களுக்கான குறிப்பிட்ட பதிவுகளை மட்டும் பாஜக அதன் X வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

இதையும் படிங்க: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான முறைகேடு வழக்கு: உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும்.. வழக்கின் பின்னணியும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.