ETV Bharat / bharat

சண்டிகர் மேயர் தேர்தல்: "ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்.. ஜனநாயக படுகொலையை ஒருபோதும் அனுமதியோம்" - உச்ச நீதிமன்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 8:01 PM IST

Updated : Feb 6, 2024, 5:26 PM IST

சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயக கேலிக்கூத்து என்றும் அதுபோன்று ஜனநாயகத்தை படுகொலை செய்ய ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி : பஞ்சாப் மற்றும் அரியானாவின் தலைநகரான சண்டிகருக்கு, கடந்த ஜனவரி 30ஆம் தேதி மாநகராட்சி மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் சார்பில் மேயர் பதவிக்கு குல்தீப் சிங் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் மனோஜ் சோங்கர் போட்டியிட்டார்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற வாக்குப்பதிவில் 36 மொத்த வாக்குகளும் பதிவாகின. இதில் மனோஜ் சோங்கருக்கு 16 வாக்குகளும், குல்தீப் சிங்கிற்கு 12 வாக்குகளும் கிடைத்தன. இந்தியா கூட்டணியை சேர்ந்த 8 வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன. இதன்மூலம் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாஜகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே 8 வாக்குகள் செல்லாது என்று தேர்தல் அதிகாரி அறிவித்ததாகவும், அவர் உள்நோக்கத்துடன் செயல்பட்டிருக்கிறார் எனவும் குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

சண்டிகர் மாநகராட்சியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு 20 கவுன்சிலர்கள் உள்ளனர். பாஜகவிற்கு 15 பேர் மட்டுமே உள்ளனர். சிரோன்மணி அகாலி தளத்திற்கு 1 கவுன்சிலர் உள்ளார். செல்லாது என்று அறிவிக்கப்பட்ட வாக்குகள் அனைத்தும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினரின் வாக்குகள்.

ஆகையால் திட்டமிட்டு மோசடி நடந்துள்ளது என்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருதலை பட்சமாக நடந்து கொண்டதாகவும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் அன்றைய தினம் வாக்குச் சீட்டில் நடைபெற்ற மோசடி குறித்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகியது.

8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் சார்பில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம், 3 வாரத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

இதை எதிர்த்து ஆம் ஆத்மி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனு தலைமை நீதிபதி அமர்வில் இன்று (பிப். 5) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம் என்றும் ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயலாகத்தான் தான் இதை பார்ப்பதாகவும் கூறினார்.

மேலும், இது போன்று ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டுகளைச் சிதைத்துள்ளார் என்பது அந்த வீடியோவில் வெளிப்படையாகவே தெரிவதாகவும் கூறினார். இப்படியா தேர்தலை நடத்துவது என்றும் தேர்தல் அதிகாரி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், செல்லாத வாக்குகளாகவே இருந்தாலும் அதில் எந்த ஒரு திருத்தத்தையும் தேர்தல் நடத்தும் அதிகாரி மேற்கொள்ளக்கூடாது என்றும் தேர்தல் அதிகாரி செய்த செயல்களை எல்லாம் உச்சநீதிமன்றம் பார்த்துக் கொண்டு இருக்கிறது என அவரிடம் தெரிவிக்குமாறும் நீதிபதி தெரிவித்தார். பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற இருந்த சண்டிகர் மேயர் கூட்டத்திற்கும் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க : உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் பீரங்கி குண்டுகள் உருவாக்கி அசத்தல்.. ஐஐடி மெட்ராஸ் சாதனை!

Last Updated :Feb 6, 2024, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.