ETV Bharat / bharat

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் கைது - மு.க.ஸ்டாலின் கண்டனம்! - Arvind Kejriwal arrested

author img

By PTI

Published : Mar 21, 2024, 9:29 PM IST

Updated : Mar 22, 2024, 6:11 AM IST

Arvind Kejriwal arrested by ED
Arvind Kejriwal arrested by ED

Arvind Kejriwal arrested by ED: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.

டெல்லி: டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட மதுபானக் கொள்கை தனியாருக்கு லாபம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இது சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அளித்திருந்தது. இதற்கு முன்னதாக, ஜிஎன்சிடிடி (GNCTD)-இன் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக, டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை, கடந்த பிப்ரவரி 26 அன்று சிபிஐ கைது செய்தது.

இதனைத் தொடர்ந்து, மார்ச் 9ஆம் தேதி, திஹார் சிறையில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அமலாக்கத்துறையால் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். முன்னதாக, டெல்லியின் ஜோர் பாக் மதுபான விநியோகஸ்தர் இண்டோஸ்பிரிட் குழுமத்தின் நிர்வாக இயக்குனரான சமீர் மகேந்துரு இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

இதனை அடுத்து, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 36க்கும் அதிகமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டது. இதுமட்டுமல்லாது, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ, தனது முதல் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளது. இத்தகைய சூழலில் தற்போது, மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆதரவாளர்களும், பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரது கைதுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது 'X' வலைதளப் பக்கத்தில், ”நாடாளுமன்றத் தேர்தல் 2024க்கு முன்னதாக, தோல்வியின் பயத்தால் உந்தப்பட்டு, டெல்லி முதல்வரைக் கைது செய்ததன் மூலம் பாசிச பாஜக அரசு வெறுக்கத்தக்க ஆழத்தில் மூழ்கியுள்ளது. அநியாயமாகக் குறிவைக்கப்பட்ட சகோதரர் ஹேமந்த் சோரனைத் தொடர்ந்து, சகோதரர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தின் சீரழிவு போன்றவற்றை அம்பலப்படுத்தியுள்ளது.

ஒரு பாஜக தலைவர் கூட இதுபோன்ற விசாரணையையோ அல்லது கைது செய்வதையோ எதிர்கொள்வதில்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்களை, பாஜக அரசு இடைவிடாமல் துன்புறுத்துவது ஒரு அவநம்பிக்கையைச் சாடுகிறது. இந்த கொடுங்கோன்மை பொதுமக்களின் கோபத்தைத் தூண்டுகிறது, பாஜகவின் உண்மையான நிறத்தை வெளிக்கொணர்கிறது. ஆனால் அவர்களின் வீண் கைதுகள் நமது உறுதியை எரியூட்டுகிறது. இந்தியா கூட்டணியின் வெற்றிப் பயணத்தைப் பலப்படுத்துகிறது. மக்களின் கோபத்துக்கு ஆளான பாஜக" என்று பதிவிட்டு அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தேர்தல் பத்திர விவகாரம்: அனைத்து தகவல்களும் வெளியீடு- உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல்! - SBI File Addifavit In SC

Last Updated :Mar 22, 2024, 6:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.