ETV Bharat / bharat

முடிவில்லா மனித-விலங்கு மோதல்.. தீர்வு என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 5:45 PM IST

Etv Bharat
Etv Bharat

Man-Animal Conflicts: இந்தியாவின் வளர்ந்து வரும் மாநிலங்களில் அதிகரிக்கும் மனித-விலங்கு மோதலால் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகின்றது. இந்த மோதலுக்கான காரணம் மற்றும் தற்போதைய நிலை குறித்து விரிவாக விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

ஹைதராபாத்: ராஜஸ்தான், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட வளர்ந்து வரும் பல மாநிலங்கள், வனவிலங்குகளின் அச்சுறுத்தல்களுக்கு தொடர்ந்து ஆளாகி வருகின்றன. இந்நிலையில் புலிகள், யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளின் தாக்குதல்களுக்கு ஆளாகி உயிரை இழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஆரம்ப நிலை: பூமி என்பது மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட அனைத்து வகை ஜீவராசிகளுக்குமான பொது வாழ்விடம். இத்தகைய பூமியில், உயிர் ஆதாரமாக இருக்கக்கூடிய நீர் சுழற்சியைப் பராமரிப்பதில் காடுகள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், காடுகளே உயிரினங்களின் புகழிடமாக உள்ளது.

இந்நிலையில், ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மக்கள் தொகை, காடுகள் ஆக்கிரமிப்பு, வனப்பகுதியில் உருவாகும் கட்டுமானங்கள், வனங்கள் அழிக்கப்படுதல் உள்ளிட்டவற்றால், காடுகளை புகழிடமாகக் கொண்டு வாழும் வனவிலங்குகள் வேறு வழியின்றி உணவுக்காகவும், நீருக்காகவும் காட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது.

மனித-விலங்கு மோதல்: இயற்கை வளங்கள் மீதான மனிதனின் ஆதிக்கம் மற்றும் வாழ்விடம் வேண்டும் வன விலங்குகளின் தேடல் காரணமாகவே மனித-விலங்கு மோதல் ஏற்படுகிறது. மனிதனுக்கும், வனவிலங்குகளுக்கும் இடையிலான இத்தகைய எதிர்மறை தொடர்பு, ஆண்டுதோறும் வன விலங்குகள் மற்றும் மக்களின் இறப்பு விகிதத்தை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த மனித-விலங்கு மோதலானது, மனித-சிறுத்தை புலி மோதல், மனித-புலி மோதல், மனித-யானை மோதல் என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இதில், உலகின் மிகப்பெரிய மாங்ரோவ் தீவுகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட வங்காளப் புலிகளின் தாயகமான இருக்கும் மேற்கு வங்காளத்தின் சுந்தர்பான்ஸில் (Sunderbans), ஆண்டுக்கு 50 முதல் 100 பேர் வரை இந்த மனித-புலி மோதலால் மக்கள் இறப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், மனித-யானை மோதலில் இந்தியாவில் ஆண்டுதோறும் 400 பேர் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் மற்ற வன விலங்குகளைக் காட்டிலும் சிறுத்தைப் புலிகளாளேயே மக்கள் அதிக அளவு இறப்பதாகக் கூறப்படுகிறது.

அந்த வகையில், மனித-சிறுத்தை புலி மோதல்கள் பெரும்பாலும் மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா மற்றும் அஸ்ஸாமில் இருந்து தான் அதிக அளவில் பதிவாகிறது. மேலும் உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்பெட் தேசிய பூங்கா, மனிதனை உண்ணும் சிறுத்தைப் புலிகளுக்கு பெயர் பெற்ற ஒன்று. மனிதர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடைபெறுவதற்கு இத்தகைய சிறுத்தை புலிகள் தான் காரணமாகக் கூறப்படுகின்றன.

மலைப்பகுதிகளில்.. கடந்த மூன்று ஆண்டுகளில் மனித-விலங்கு மோதலால் உத்தரகண்ட் மாநிலத்தில் 219 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரத்து மூன்று பேர் தாக்குதல்களுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு மட்டும் மனித-விலங்கு மோதலில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 71 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த ஆண்டு உயிரிழப்பானது 82 ஆக உயர்ந்த நிலையில், 2023ஆம் ஆண்டு 66 ஆக குறைந்துள்ளது.

யானை வழித்தடங்களில்.. மனித-விலங்கு மோதலில் பல உயிர்களை பலி கொடுத்த மாநிலங்களில் மேற்கு வங்காளமும் ஒன்று. இந்த மாநிலத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகள், யானை வழித்தடமாக இருப்பதால், இதுபோன்ற சம்பவங்கள் இங்கு வழக்கமாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

வடக்கு வங்காளத்தில் கடந்த 2008ல் சுமார் 450 யானைகள் இருந்த நிலையில், 2010ல் 530 யானைகளாக அதிகரித்து, 2014ல் 640ஆக யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தற்போது அங்கு, யானைகளின் எண்ணிக்கை 700ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது. யானைகளின் இந்த அதிகரித்து வரும் எண்ணிக்கையால், வனப்பரப்பு அவைகளுக்கு போதுமானதாக இல்லை என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், இங்கு யானைத் தாக்குதலால் ஆண்டுதோறும் சராசரியாக 35 முதல் 50 பேர் வரை இறப்பதாகக் கூறப்படுகிறது.

ஜங்கிள் மஹால்.. வங்காளத்தின் ஜார்கிராம், பங்குரா, புருலியா மற்றும் பாஸ்சிம் மெதினிபூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஜங்கிள் மஹால் பகுதியும், அடிக்கடி யானைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகிறது. மேலும், அண்டை மாநிலமான ஜார்கண்ட் வரை யானைகள் வழித்தடமாக இருப்பதால், இந்த பகுதிக்குள் இருக்கும் கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் யானைகள் நுழைந்து பெரும் அச்சுறுத்தலையும், சேதங்களையும் ஏற்படுத்தி வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதையும் படிங்க: மத்திய பிரதேச தலைமை செயலகத்தில் பயங்கர தீ விபத்து! எப்படி நடந்தது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.