ETV Bharat / bharat

இந்தியாவிற்குள் நுழைய இங்கிலாந்து பேராசிரியைக்கு அனுமதி மறுப்பு! மத்திய அரசு தான் காரணமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 5:20 PM IST

Etv Bharat
Etv Bharat

England Writer Nitasha Kaul: பெங்களூரில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் பங்கேற்க லண்டன் பேராசிரியை இந்தியா வந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்க மத்திய அரசால் அனுமதி மறுக்கப்பட்டு மீண்டும் லண்டனுக்கு அனுப்பப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பெங்களூர்: இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் அரசியல் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் நிதாஷா பவுல். இவர் புகழ்பெற்ற எழுத்தாளரும், ஆர்.எஸ்.எஸ் மீதான விமர்சனங்களுக்குப் பெயர் பெற்றவரும் ஆவார்.

இந்நிலையில், இவர் கடந்த 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பெங்களூரில் காங்கிரஸ் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒற்றுமை' என்ற மாநாட்டில், 'அரசியலமைப்பும் ஜனநாயகமும்' என்ற தலைப்பில் பேசுவதற்காக கர்நாடக அரசு சார்பில் அழைக்கப்பட்டு இருந்தார்.

இதையடுத்து, கர்நாடக அரசின் அழைப்பினை ஏற்ற நிதாஷா பவுல் மாநாட்டில் பங்கேற்கக் கடந்த பிப்.24ஆம் தேதி இந்தியா வந்துள்ளார். ஆனால் பெங்களூர் விமான நிலையம் வந்தடைந்த அவர், செல்லுபடியாகும் விசா இருந்தும் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பங்கேற்க மத்திய அரசால் அனுமதி மறுக்கப்பட்டு, பெங்களூர் விமான நிலைய குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் லண்டனுக்கே தான் திருப்பி அனுப்பப்பட்டதாக நிதாஷா பவுல் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எங்களால் எதுவும் செய்ய முடியாது. டெல்லியிலிருந்து ஆர்டர் வந்துள்ளது என்பதைத் தவிர, நான் கேட்ட கேள்விகளுக்கு எனக்கு வேறு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. நான் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டேன் என்பது குறித்த எந்தத் தகவலும் எனக்கு டெல்லியிலிருந்து வரவில்லை. விமான நிலைய குடியேற்ற அதிகாரிகள் என்னைப் பல மணி நேரம் காக்க வைத்தனர்.

CCTV கண்காணிப்பின் கீழ் 24 மணிநேரம் அறையில் அடைக்கப்பட்டேன். உணவும், தண்ணீரும் எளிதில் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு ஆளானேன். படுக்கக் குறுகிய இடம் மட்டுமே வழங்கப்பட்டது. ஒரு தலையணை மற்றும் போர்வை போன்ற அடிப்படைத் தேவைக்காக, பலமுறை விமான நிலையத்தைத் தொடர்பு கொண்ட போதிலும், அதனைக்கூட அவர்கள் வழங்க மறுத்துவிட்டனர்.

மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மீதான எனது விமர்சனத்தை, விமான நிலைய குடியேற்ற அதிகாரிகள் குறிப்பிட்டுப் பேசினர். நான் பலமுறை இந்தியாவுக்குப் பயணம் செய்திருக்கிறேன். ஆனால், தற்போது என்னை ஒரு மாநில அரசு அழைத்த நிலையில், மத்திய அரசு அதனை மறுத்துவிட்டது. நான், எனது ஆர்.எஸ்.எஸ் குறித்த விமர்சனங்களால், கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல்களுக்கு ஆளாகியுள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த பகுஜன் எம்.பி.! அருணாசல பிரதேசத்தில் காங். எம்.எல்.ஏக்கள் பாஜகவில் ஐக்கியம்! என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.