ETV Bharat / bharat

தேர்தல் நடத்தை விதி: புதுச்சேரியில் 996 லிட்டர் மதுபானம் பறிமுதல்..தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல் - puducherry lok sabha

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 29, 2024, 10:45 AM IST

Puducherry Lok Sabha: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், புதுச்சேரியில் கொடி கம்பங்கள், கட்சி விளம்பரங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டுள்ளதாகவும், 996 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தேர்தல் நடத்தும் அதிகாரியான குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

A Kulothungan IAS
A Kulothungan IAS

புதுச்சேரி: நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைப் பொறுத்தவரையில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரியில் மேற்கொண்டுள்ள தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தம் 10 லட்சத்து 23 ஆயிரத்து 699 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 979 பெண்களும், 4 லட்சத்து 80 ஆயிரத்து 569 ஆண்களும், மூன்றாம் பாலினத்தவர் 151 பேரும் உள்ளனர். இதில், முதல் முறை வாக்காளர்கள் 28 ஆயிரத்து 921 பேர் உள்ளனர். 80 வயதுக்கு மேல் 46 ஆயிரத்து 812 வாக்காளர்கள் உள்ளனர். இரண்டு மாநில வாக்காளர்களாக கருதப்பட்டோர் நீக்கப்பட்டுள்ளனர் என்றார்.

புதுச்சேரியில் மொத்தம் 967 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் புதுச்சேரியில் 180, காரைக்காலில் 35 என 232 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும்.

இதுவரையில் கலால்துறையில், 110 வழக்குகள் பதிவாகி 41 பேர் கைதாகி உள்ளனர். அவர்களிடம் ரூ.6.38 லட்சம் அபராதம் போடப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி முழுவதும் ரூ. 3.6 லட்சம் மதிப்புள்ள 996 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், "வீட்டிலிருந்து வாக்களிக்க 85 வயதுக்கு மேற்பட்ட 1,609 முதியோரும், 1,322 மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தோர் 2,931 பேரின் வீடு தேடிச் சென்று வாக்கு பெறும் பணிகள் வரும் ஏப்ரல் 2-ல் துவங்கும்.

கட்டணமில்லா தொலைப்பேசி (1950) மூலம் 248 புகார்கள் வந்துள்ளன. இதில், 31 புகார்கள் தீர்வு காணப்பட்டன. வாட்ஸ்அப்பில் 20 புகார்களும், சி விஜில் செயலி மூலம் 10 புகார்களும் வந்துள்ளது. புதுச்சேரி முழுவதும் 4 ஆயிரம் வாக்குச்சாவடி அதிகாரிகள் பணியாற்றவுள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலானதைத் தொடர்ந்து, புதுச்சேரி கட்சி கொடி கம்பம், பேனர், போஸ்டர், சுவர் விளம்பரங்கள் ஆகியவை அகற்றப்பட்டுள்ளன. பாதுகாப்புப பணிகளுக்காக புதுச்சேரியில் மத்திய ஆயுத போலீஸ் படை (சிஏபிஎப்) இரண்டு கம்பெனிகள் வந்துள்ளன. இன்னும் பத்து கம்பெனிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் வரவுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றால் என்ன? இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது தேர்தல் கட்டுப்பாடுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.