ETV Bharat / bharat

அரியானாவில் ஆட்சியை இழக்கிறதா பாஜக? நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு கடிதம்! - Haryana political crisis

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 5:30 PM IST

அரியானா சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாஜகவுக்கு உத்தரவிடக் கோரி ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் துஷ்யந்த் சிங் சவுதாலா கடிதம் எழுதி உள்ளார்.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

சண்டிகர்: அரியானாவில் முதலமைச்சர் நயீப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக மூன்று சுயேட்சை எம்எல்ஏக்கள் தெரிவித்தனர். இதையடுத்து சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி பாஜகவுக்கு உத்தரவிடுமாறு ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சிங் சவுதாலா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்

மேலும் இது தொடர்பாக பேச காங்கிரஸ் கட்சியும் ஆளுநரிடம் அவகாசம் கோரியுள்ளது. ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷயந்த் சிங் சவுதாலா ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த மார்ச் மாதம் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து ஜனநாயக ஜனதா கட்சி வெளியேறியது. அதைத் தொடர்ந்து நயீப் சைனி கடந்த மார்ச் மாதம் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு பல்வேறு சுயேச்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்ததை தொடர்ந்து முதலமைச்சராக நயீப் சைனி ஆட்சிப் பொறுப்பேற்றார். இந்நிலையில், சுயேட்சை எம்.எல்.ஏ ரஞ்ஜித் சிங் சவுதாலா கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி தனது பதவியை ராஜினமா செய்தார். தற்போது பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 6 சுயேட்சை எம்.எல்.ஏக்களில் 3 பேர் தங்களது ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

மேலும், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய சுயேட்சை எம்.எல்.ஏக்கள் தங்களது ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து பாஜகவை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த துஷ்யந்த் சவுதாலா, அரியானா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில் ஜனநாயக ஜனதா கட்சி, காங்கிரஸ்க்கு தனது ஆதரவை வழங்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள மற்ற இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்ற சந்தேகம் நிலவுகிறது.

அவர்கள் பாஜகவுடனான கூட்டணியை தொடர்வார்களா அல்லது ஆதரவை திரும்பப் பெறுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 88 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட அரியானாவில் ஆளும் பாஜகவுக்கு 40 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 30 பேரும், ஜனநாயக ஜனதா கட்சிக்கு 10 எம்.எல்.ஏக்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்கவைக்க இன்னும் 3 பேரின் ஆதரவு தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இலங்கையில் செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு! - Sri Lanka President Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.